திருவள்ளூர்: 2 நாட்களில் 2 வடமாநில தொழிலாளர்கள் மரணம்... செங்கல் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் அருகே செங்கல் தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களில் 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அங்கிருந்து உணவு மற்றும் தண்ணீர் மாதரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மேலகொண்டையார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென அங்குள்ள சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமகிருஷ்ண தியாகு (65) என்பவர் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன 19) அவர் உயிரிழந்தார். தொடர்ந்து நேற்று (ஜன 20) மாலை ஹைதர் சண்டா (52) என்பவர் செங்கல் தொழிற்சாலையிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினரும், வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். ஏற்கனவே 4 மாத குழந்தை ஒன்றும் இப்பகுதியில் உயிரிழந்ததால் தொடர் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட சுகாதார துறையினரிடம் நாம் கேட்ட போது, “4 மாத குழந்தை பால் புரையேறி உயிரிழந்துள்ளது. பெரியவர்கள் இருவரும் உயிரிழந்தது ஏன் என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பிறகே தெரியும். வயிற்றுப்போக்கு காரணமாக அவர்கள் இறந்தார்களா என்பதை அறிய தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளளோம். தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ முகாமிட்டு கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்தனர்.
அப்பகுதியில் விற்கப்பட்ட கோழி இறைச்சியில், கோழியின் குடல் பகுதி விற்கப்பட்டது என்றும் அதனாலேயே தொழிலாளர்கள் இருவர் மரணித்திருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. இருப்பினும் அதை சுகாதாரத் துறையினர் மறுத்துள்ளனர். உரிய விசாரணைக்கு பின்னரே தொழிலாளர்கள் இறப்புக்கான காரணத்தை கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.