திண்டுக்கல்: டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்து - இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
செய்தியாளர்: காளிராஜன்.த
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சேடப்பட்டியை சேர்ந்த 15 ஆண்கள், திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரையன்குளம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவிற்கு நேற்று (ஜூன்.21) காலை டிராக்டரில் வந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு திருவிழாவை முடித்துவிட்டு அதிகாலை 3 மணியளவில் அதே டிராக்டரில் 15 பேரும் சேடப்பட்டிக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, திண்டுக்கல் - பழனி நெடுஞ்சாலையில் வந்தபோது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து, டிராக்டர் மீது மோதியுள்ளது. இதில், பெரியண்ணா (33) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், அழகுமலை (17) மற்றும் அசோக் குமார் (18) ஆகிய இரு இளைஞர்களும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அழகுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அசோக்குமார் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 6 பேர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.