அமைச்சரவையில் இடம் பெறாத 2 துறைகள்.. முதல்வருக்கு ஒதுக்கப்பட்ட புது பொறுப்பு.!
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு, இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பின்னர், இன்று அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்களை நியமித்துள்ளது. காங்கிரஸ் 2, தவெக 21 பேருக்கு பதவி; பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேர், 4 பெண்கள், 2 பிராமணர்கள் இடம்பெற்றுள்ளனர். வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் சுமை ஒழிப்பு துறைகள் கூடுதலாக முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
50 ஆண்டுகால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து இரண்டே வருடங்களில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 23 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும், தவெகவைச் சேர்ந்த 21 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அப்போது இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் முதலமைச்சருக்கான துறையில் கூடுதலாக வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன் சுமை ஒழிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பிராமண சமூகத்தை சேர்ந்த ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.
ஏற்கனவே பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த வெங்கடராமனும் உணவுத்துறை அமைச்சராக இருக்கிறார். இது அனைவரையும் உள்ளடக்கிய அமைச்சரவையாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த அமைச்சரவையில் விசிக மற்றும் IUML ஆகிய கட்சிகள் இணையும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் காதர் மொகிதீன் தவெக அரசின் அமைச்சரவையில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இரண்டு துறைகளுக்கு மட்டும் இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை . சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை; அமைச்சரவையில் இடம்பெறுவதாக சொல்லப்படும் ஐயுஎம்எல்-க்கு சிறுபான்மையினர் நலத்துறையும், விசிகவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

