கள்ளக்குறிச்சி - மூதாட்டிகளை மட்டுமே குறி வைத்து திருட்டு; சிறுவன் உட்பட இருவர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த மாதம் 20-ம் தேதி தங்கம் என்ற மூதாட்டி நகையை அடகு வைத்து சுமார் 1,18,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்து போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சசாங் சாய் உத்தரவின் பேரில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர் போலீசார் ‘மூதாட்டியிடம் பணம் இருப்பதை நன்கு அறிந்த நபர்களால் மட்டுமே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும்’ என்ற கோணத்தில் இந்தியன் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது இரண்டு மர்மநபர்கள் மூதாட்டியை பின் தொடர்ந்து வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் வங்கியின் அருகாமையிலிருந்த சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் வெள்ளை நிற பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் வந்தது தெரிய வந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த பதிவு நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், அது சென்னை சோழவரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்தது. அவர் தனது வாகனம் காணாமல் போய் இருப்பதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து பல்சர் வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் யார் என்பது குறித்து சி.சி.டி.வி காட்சிகளை மீண்டும் ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களில் ஒருவர் சிறார் மற்றும் நந்தா என்கின்ற பழனிசாமி என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் நடத்திய அடுத்தடுத்தகட்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் பண்ருட்டி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களைக் கைது செய்து சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சங்கராபுரம் பகுதியில் மூதாட்டியிடம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டனர்.
இத்துடன் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொள்ளையடித்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வங்கிகளில் நோட்டமிட்டு, அங்கு வயதான முதியவர்களை மட்டு குறிவைத்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இருவரும் பெரம்பலூர், துறையூர் பகுதிகளில் குற்ற வழக்கில் சிக்கி சிறை சென்று வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் சங்கராபுரம் இந்தியன் வங்கி அருகே கொள்ளையடிக்கப்பட்ட ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தில் 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கிய 35 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் மற்றும் கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றைத் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கிகளிலிருந்து பணம் எடுத்து வரும் முதியோர்கள் மற்றும் பொதுமக்களைக் குறி வைத்து நகை பணம் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.