கரூர் | கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. 18 மாணவர்கள் காயம்.!
வெள்ளியனையில் கல்லூரி பேருந்து ரயில் தண்டவாளத்தில் சிக்கி, சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியனைப் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்க முற்பட்டனர். அதற்குள் புலியூரில் உள்ள ஒரு சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிக் கொண்டு அந்த வழியாகச் சென்ற சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

