சென்னையில் திடீர் மேக வெடிப்பு? இரவில் கொட்டித் தீர்த்த கனமழை... பிரதீப் ஜான் அளித்த விளக்கம் என்ன?
சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், வடபழனியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது..
சென்னையில் கனமழை
சென்னையில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழைக்கு மேல் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சென்னையில் இந்தாண்டின் முதல் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் 100 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் மேக வெடிப்பால் நேற்று இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. மாநகரில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நங்கநல்லூர், தேனாம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அடையாறு, வியாசர்பாடி, மந்தைவெளி, அண்ணாநகர், வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
சென்னை புறநகரில் கனமழை
புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. மாதவரம், மணலி, ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. விடிய விடிய பெய்த மழையால், சென்னை மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், திருவேற்காட்டில் மழை வெளுத்து வாங்கியது. இதேபோல், ஆவடி, திருமுல்லைவாயல், மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்ததுடன், தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கியது. முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
சென்னையில் மேகவெடிப்பு? பிரதீப் ஜான்
நடப்பாண்டின் முதல் மேகவெடிப்பு நிகழ்வு, சென்னையில் ஏற்பட்டுள்ளதாக தனியார் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இரவு 11 மணியளவில் மழை தொடங்கிய நிலையில், வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில், ஒருமணிநேரத்திற்குள் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைப் பதிவானதாக, வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, பெரியகுளம் பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டை, கறம்பக்குடி, அரிமளம், அறந்தாங்கி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர், தேவகோட்டை ரஸ்தா, ஸ்ரீராம் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடியுடன் மழை பெய்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளிலும் மழை பெய்தது. தேனி மாவட்டம் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.