பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் காய்ச்சல்.. சென்னையில் சளி, வறட்டு இருமலால் மக்கள் அவதி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, வறட்டு இருமலுடன் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மாறிவரும் தட்பவெப்பநிலை இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, வறட்டு இருமலுடன் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மாறிவரும் தட்பவெப்பநிலை இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் காய்ச்சலில் 70% இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலாக இருக்கலாம் என பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மழைநீர் தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு காய்ச்சலும் பரவ வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.
இந்த காய்ச்சலை தவிர்க்க, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீரைகள், பழங்கள், காய்கறிகள் உண்பது, கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.