“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்
ஊழல் அதிகாரிகளாலேயே இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கவலை தெரிவித்துள்ளது.
கரூர் மற்றும் திருச்சி அரசு மணல் குவாரிகளில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த வழக்கறிஞர் குழு, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனைச் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜாமணி, முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு உதவிப் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மணல், ஆறு உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பது நமது கடமை என்று தெரிவித்தனர். வரும் தலைமுறையினருக்காக இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். 80 சதவிகித அதிகாரிகள் நேர்மையாக இருப்பதாகவும், மீதமுள்ள 20 சதவிகித அதிகாரிகளாலேயே இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம் எனக் கூறினர். இதைத்தொடர்ந்து 2 வாரத்திற்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.