ஊக்கமருந்து விவகாரம் | பஜ்ரங் புன்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை.. உண்மையான காரணம் என்ன?
பஜ்ரங் புன்யாவிற்கு நான்கு ஆண்டுகள் தடை
கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்தவர், பஜ்ரங் புன்யா. இவர், ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரி வழங்க மறுத்ததைத் தொடர்ந்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் பஜ்ரங் புன்யாவை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இடை நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து உலக மல்யுத்த கூட்டமைப்பும் (UWW) பஜ்ரங் புன்யாவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பஜ்ரங் புனியா தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின்(NADA) ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முறையீடு செய்தார். இதையடுத்து பஜ்ரங் புனியா மீதான குற்றச்சாட்டு அறிக்கையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் வெளியிடும்வரை இடைநீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் நோட்டீஸ் வழங்கியது. இதனிடையே ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பஜ்ரங் புன்யா, தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சி, அகில இந்திய கிசான் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை வழங்கியது. அதேவேளையில், ஜூலை 11ஆம் தேதி குற்றச்சாட்டு தொடர்பாக தனது பதிலை, புன்யா தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணைக்குப் பிறகு, ‘பிரிவு 10.3.1 இன்கீழ் விதிக்கப்பட்ட தடைகளுக்கு பஜ்ரங் பொறுப்பு’ எனக் கூறியுள்ள தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம், அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தடைக் காலக்கட்டத்தில் பஜ்ரங் புனியா மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டில் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை குறித்து பஜ்ரங் புன்யா சொல்வது என்ன?
இதுகுறித்து பஜ்ரங் புன்யா, “இது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரிகளைக் கொடுக்க நான் ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததில்லை. காலாவதியான மாதிரி சேகரிக்கும் கருவிகளை அவர்கள் அனுப்பிவைத்தனர். இதனை சமூக வலைதளப் பக்கத்திலும் நான் பகிர்ந்துள்ளேன். பரிசோதனைக்காக நான் சிறுநீர் மாதிரி கொடுத்திருந்தேன்.
ஆனால், அதனை பரிசோதனை செய்த கருவிகள் காலாவதியானவை என்பதை எனது குழு கண்டறிந்துள்ளது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு மின்னஞ்சல் அனுப்பி இதனைத் தெரிவித்தேன். அவர்களின் பிழையை சுட்டிக்காட்டினேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டத்தால் இவ்வாறு நடக்கிறது என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம்
முன்னதாக பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக சாக்ஷி மாலிக், வினேத் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடைபெறவில்லை என கடந்த ஆண்டு ஜனவரி முதல் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.