ஐபிஎல் மெகா ஏலம் | பிரித்வி ஷா தேர்வு செய்யப்படாதது ஏன்? டெல்லி அணி உரிமையாளர் விளக்கம்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்வுசெய்யப்படாத பிரித்வி ஷா
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும்25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில், 182 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஏலத்தில் பிரித்வி ஷாவை எந்த அணியும் வாங்காதது பேசுபொருளாகி உள்ளது. அவரின் அடிப்படை விலையாக ரூ.75 லட்சம் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட போதும்கூட எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
இந்திய அணியின் அடுத்த சச்சினாக, சேவாக்காக, லாராவாக வருவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர், பிரித்வி ஷா. 2018 யு-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்ததோடு, கோப்பையையும் பெற்றுத் தந்தவர், ஷா. அதேவேகத்தில் இந்திய அணியிலும் விரைவிலேயே இடம்பெற்றார். ஆனால், 2019 ஊக்கமருந்து சோதனையில் அவர் சிக்கியதற்கு பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இதனால், 8 மாதங்கள் விளையாட தடை விதித்தது பிசிசிஐ. தொடர்ந்து ஒழுக்கமின்மை, காயம், ஃபிட்னஸ் பிரச்னை என பல்வேறு காரணங்களால் இந்திய அணியிலும் இடம்பிடிக்க முடியாமல் போனார்.
முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனம்
ஒருகட்டத்தில், ரஞ்சி டிராபி அணியில் இருந்துகூட மும்பை கிரிக்கெட் சங்கம் நீக்கியிருந்தபோதும், ஐபிஎல்லில் டெல்லி அணி, 2018ஆம் ஆண்டு முதல் அவரை ஏலத்தில் எடுத்து விளையாட வைத்தது. இந்தச் சூழலில்தான் தற்போதைய நிலையில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அவரைத் தேர்வு செய்யாததற்குக் காரணம் என்ன என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் இருக்கும் ஃபார்ம் என்பதைத் தாண்டி உடற்தகுதி, அவரது நடத்தைகள் என பலவற்றிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரைக் கடுமையாகச் சாடியுள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளராக இருந்த முகம்மது கைஃப், “ப்ரித்வி ஷா ஏலத்தில் எடுக்கப்படாதது வெட்கக்கேடானது. அவர் தனது நற்பெயரை மீண்டும் சம்பாதிக்கும் முயற்சியில் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வாளராக இருந்த முன்னாள் செலக்டர் ஒருவரும் அவரைக் கடுமையாகச் சாடியிருந்தார். அவர், “ப்ரித்வி ஷா டெல்லி கேப்பிடல்ஸில் விளையாடியுள்ளார். ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டுடன் அவருக்குப் பழக வாய்ப்பு கிடைத்தது. சச்சின் ப்ரித்வி ஷாவுடன் பேசியதும் ஊரறிந்த ரகசியம். இவர்கள் எல்லாம் முட்டாள்களா? இவர்கள் கூறியதற்குப் பின்பாகவாவது ப்ரித்வி ஷாவிடம் எதாவது மாற்றம் இருந்ததா? அப்படியே எதாவது இருந்திருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியவில்லை” என விமரிசித்துள்ளார்.
பிரிஷ்வி ஷா தேர்வு செய்யப்படாதது ஏன்?
இந்த நிலையில், பிரிஷ்வி ஷா தேர்வு செய்யப்படாதது குறித்து டெல்லி அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டாலும் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “பிரித்வி ஷா ஒரு சிறந்த வீரர். ஆனால், அவர் பல வழிகளில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார். ஏனென்றால், நாம் வளரும்போது நம்மையும் பலரும் திறமையானவர்கள் என பாராட்டுவார்கள். அந்த வகையில், சச்சின் மற்றும் கோலிக்குப் பிறகு உலகில் MRF பேட் வைத்திருக்கும் ஒரே பேட்டர் பிரித்விதான் எனப் புகழ்ந்தனர். இன்னும் சிலர் அவரை லாரா என்றும், சச்சின் என்றும் அழைத்தார்கள். அப்போது, அதற்கேற்ற சூழலில்தான் அவரும் இருந்துவந்தார்.
மும்பை கிரிக்கெட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பேசினர். இப்போதும், அதுபோல் அவர் பேசப்பட வேண்டும். இதுநாள் வரை ஐபிஎல் ஒப்பந்தத்தில் விளையாடி வந்தார். டெல்லி அணியில்கூட தொடக்க வீரராக வலம் வந்தார். மும்பை அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடி வந்தார். இனி, அந்தப் பாதை எதுவும் இல்லை. ஆகையால், அவர் இனி வரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். கிரிக்கெட்டை அவர் நேசிக்க முழு மனதுடன் நேசிக்க வேண்டும். தவிர, ஒழுக்கம் மற்றும் ஃபிட்னஸிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.