“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன?” - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதிக்கு எது தூண்டுகோலாக இருந்தது என்பது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சமீப காலமாக உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் இந்திய கேப்டன் விராட் கோலி தனது உடற்தகுதியில் காட்டும் அக்கறைதான் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்களின் உடற்தகுதியில் விராட் கோலி முக்கிய பங்கை ஆற்றுகிறார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் உடற்தகுதிக்கும் தூண்டுகோலாக உள்ளது தொடர்பாக கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,“நாங்கள் உடற்தகுதிக்கு எப்போதும் கால்பந்து வீரர்களின் பயிற்சியையே பார்ப்போம். ஏனென்றால் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே கால்பந்து ஆட்டத்தில் பங்கேற்க முடியும். ஆகவே கால்பந்து வீரர்கள் எடுக்கும் பயிற்சி முறைகள் ஓய்வு நேரங்கள் மற்றும் உண்ணும் உணவு ஆகியவற்றை நாங்கள் நன்றாக கவனிப்போம்.
கிரிக்கெட்டையும் கால்பந்தையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டிற்கு கால்பந்து ஆட்டத்தை போல உடற்தகுதி தேவையில்லை. எனினும் கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து வீரர்களை போல் உடற்தகுதியுடன் இருந்தால் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை சிறப்பான முறையில் விளையாடலாம். அதை தான் நாங்கள் செய்ய முயற்சித்து வருகிறோம். எங்களது உடற்தகுதி சிறப்பாக இருந்தால், ஆடுகளத்தில் எங்களது விளையாட்டும் சிறப்பாக இருக்கும். கிரிக்கெட் வீரர்களைவிட கால்பந்து வீரர்கள் சிறந்த உடற்தகுதி உடையவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.