செஸ் தொடர் | வைஷாலியிடம் கை குலுக்க மறுப்பு.. மன்னிப்பு கேட்ட உஸ்பெகிஸ்தான் வீரர்!
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பல வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நான்காவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளையாடினார். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன், வைஷாலிக்கு நோடிர்பெக் கை குலுக்க மறுத்தார்.
வைஷாலி கை கொடுக்க முன்வந்தபோது அவர் கை கொடுக்காமல் தன் இருக்கையில் அமர்கிறார். இது, செஸ் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, அதற்கு நோடிர்பெக் விளக்கம் அளித்திருப்பதுடன் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அன்பான செஸ் நண்பர்களுக்கு, வைஷாலியுடனான போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன். மகளிர் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீதான மரியாதையுடன், நான் மத ரீதியிலான காரணங்களுக்காக பெண்களை தொட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக 2023ஆம் ஆண்டு திவ்யாவுடனான போட்டியின் போதும், இதுபோன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ, அதைதான் செய்வேன்.
நான் மற்றவர்களிடம் எதிர் பாலினத்தவரிடம் கை குலுக்க வேண்டாம் என்றோ, பெண்களை ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ கூறமாட்டேன். என்ன செய்ய வேண்டுமென்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இன்று பல்மகாவிடம் நான் அதை கூறினேன், அவர் அதை ஏற்றுக் கொண்டார். அரங்கிற்கு வந்ததும், நான் அப்படி செய்யக் கூடாது என்றும், குறைந்தபட்சம் வணக்கம் கூற வேண்டும் என்று கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான போட்டி துவங்கும் முன் என்னால் அவர்களிடம் இதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலையாக மாறிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.