தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்!
2024-2025ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே இன்று நடந்த கபடி போட்டியின்போது, அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில், நடுவரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நடுவரும் தமிழக வீராங்கனையை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலிகளை தூக்கி வீசிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் பூதாகாரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு கபடி மற்றும் ராஜஸ்தான் கபடி அணிகள் சார்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக வீராங்கனைகள் நன்றாக உள்ளனர்..
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி பஞ்சாபில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து 36 விளையாட்டு வீராங்கனைகளும், 3 டீம் மேனேஜர்ஸ் மற்றும் 3 டீம் பயிற்சியாளர்களும் சென்றுள்ளனர்.
தர்பங்கா பல்கலைக்கழக அணிக்கு எதிரான போட்டியின் போது தமிழ்நாடு வீராங்கனை மீது தாக்குதல் நடந்ததாக இன்று புகார் வந்தது. அப்போது உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசினோம், இந்த புகாரின் அடிப்படையில் தமிழக அணியின் பயிற்சியாளர் ஒருவரை விசாரணைக்கு போலீஸார் அழைத்துசென்றிருப்பதாக தெரிந்தது. உடனடியாக அங்கிருக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்டு நம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தப்பட்டது.
போட்டியின் போது பாய்ண்ட்ஸ் எடுப்பதில் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் வீடியோவே சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு நமது வீராங்கனைகளை அழைத்துவர வலியுறுத்தி உள்ளோம். அதற்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பயிற்சியாளரும் விடுவிக்கப்பட்டுள்ளார். அனைவரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இன்று நள்ளிரவு வீராங்கனைகள் டெல்லிக்கு சென்றுவிடுவார்கள், அங்கு அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உடனிருக்கும் ஃபிஸிக்கல் டைரக்டரிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன், நம் வீராங்கனைகள் அனைவரும் நன்றாக இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். கபடி அணி பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்பு அனுப்பப்பட்டார். 3 மணி நேரத்துக்குள்ளாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு, வீராங்கனைகள் பத்திரமாக தமிழகம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.