மகளிர் தினமான இன்று நடைபெறும் பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய வீராங்கனைகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.
சமூகத்தின் ஒவ்வொரு தடைகளையும் உடைத்தெறிந்து உருவெடுப்பவர்கள் தான் வீராங்கனைகள். கலாசாரத்தின் கரங்களால் கட்டிப்போடப்பட்ட அவர்கள், தன்னம்பிக்கை என்ற ஒற்றை ஆயுதத்தால் மகுடம் சூடி இருக்கிறார்கள். இந்திய அணிக் கேப்டன் ஹர்மன்பரீத் கவுர், சிறுவயதில் தினமும் சுமார் 30 கிலோ மீட்டர் பயணம் செய்து கிரிக்கெட் பயிற்சி எடுத்துள்ளார். கடுமையான போராட்டத்திற்கு பின் படிப்படியாக முன்னேறிய இவர், உலகின் மிகச்சிறந்த வீராங்கனைகளுள் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர், மகளிர் பிக் பேஷ் தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். ஆஸ்திரேலியா உடனான இறுதிப் போட்டி, இவருக்கு மறக்க முடியாததாக மாறவுள்ளது. காரணம், ஹர்மன்ப்ரித் கவூரின் ஆட்டத்தை முதல் முறையாக அவரது தாயார் நேரில் கண்டு ரசிக்கவிருக்கிறார். அவரின் தந்தையோ பல ஆண்டுகளுக்குப் பின் மகள் மட்டையை சூழற்றுவதை மீண்டும் நேரில் பார்க்க உள்ளார்.
பள்ளி செல்லும் பருவத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டு கொண்டிருப்பவர் 16 வயதான ஷபாலி வர்மா. இவரது அதிரடி பேட்டிங்கை கண்டு நடுங்காத பந்துவீச்சாளர்களே இல்லை என்று கூறலாம். உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தை குறுகிய காலத்திலேயே பெற்று வியக்க வைத்துள்ளார், ஷபாலி வர்மா.
5.1 அடி மட்டுமே உயரம் கொண்டவர் பூனம் யாதவ். பலவீனமாக பார்க்கப்பட்ட தனது உயரத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி சாதனை படைத்து இருக்கிறார் இந்த மாயாஜால மங்கை. நடப்பு டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள பூனம் யாதவ்விற்கு, இந்திய அணி இறுதிக்குச் சென்றதில் அளப்பரிய பங்கு உண்டு.
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்று கூறி வீராங்கனைகளை புறக்கணித்த காலம் கடந்து போயிற்று. ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிர் கிரிக்கெட் இந்தியாவில், பிரபலமாகி இருப்பதற்கு இவர்களைப் போன்ற வீராங்கனைகளின் மெச்சத்தகுந்த ஆட்டமே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.