முதல் போட்டியிலேயே திணறிய பிரேசில்: நெய்மாருக்கு என்ன ஆனது.? நூற்றாண்டு சாதனையை தக்க வைத்த பிரேசில்!
2026 ஃபிபா உலகக்கோப்பையை தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரின் முதல் நட்சத்திர போட்டியான பிரேசில் - மொராக்கோ அணிகள் மோதிய போட்டி இன்று நியூயார்க்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நெய்மார் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் ஆட்டத்தை பார்க்க காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஃபிபா தரவரிசையில் பிரேசில் 6-ம் இடத்திலும், மொராக்கோ 7-ம் இடத்திலும் இருக்கும் நிலையில் போட்டி ஆரம்பித்ததில் இருந்தே அனல் பறந்தது. இரு அணிகளும் ஒன்றுக்கொண்டு சளைத்தது இல்லை என்ற வகையில் சிறப்பாகவே ஆடினர்.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael SAIBARI) பிரேசில் கோல்கீப்பரை ஏமாற்றி அழகான ஒரு கொலை அடித்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் மொராக்கோ ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் அடிக்க பிரேசில் கடுமையாக முயற்சித்த நிலையில், அதற்கு ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
பிரேசில் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் (VINICIUS JUNIOR) இடதுபக்கத்தில் இருந்து மொராக்கோ தற்காப்பு வீரர்களை ஏமாற்றி அற்புதமாக சோலோ கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டுவந்தார். தொடர்ந்து இறுதிவரை இரு அணி வீரர்களும் வெற்றிக்கான கோலை அடிக்க கடுமையாக முயன்றும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
அதே நேரம் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் இதுவரை பிரேசில் அணி தோற்றதே இல்லை என்ற தனது நீண்டகால சாதனையை இந்த டிரா மூலமாகத் பிரேசில் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த ஆட்டம் சமனில் முடிந்திருந்தாலும் பிரேசில் அணியின் பல்வேறு ஓட்டைகள் இந்த போட்டியில் வெளிப்பட்டதாக கால்பந்து நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பிரேசில் நடுகளம் பலவீனமானது என்று பலரும் விமர்சித்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடுகளத்தில் இருந்து ஃபார்வர்ட் வீரர்களுக்குப் பந்துகளைத் துல்லியமாக பாஸ் செய்ய பிரேசில் மிகவும் திணறியது இந்த போட்டியிலும் தெளிவாக தெரிந்தது.
அதே போல மொராக்கோ அணி கவுண்டர்-அட்டாக் உத்தியைக் கையாண்டு மிக வேகமாக முன்னேறிய போதெல்லாம் பிரேசிலின் தற்காப்புப் பகுதி நிலைகுலைந்ததும் இந்த போட்டியில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மொராக்கோ அணி அடித்த முதல் கோல் இப்படி அடிக்கப்பட்டதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடுகளம் மற்றும் தற்காப்பு ஓட்டைகளை சரி செய்தால் மட்டுமே பிரேசில் அணியால் கோப்பையை நினைத்துப்பார்க்க முடியும். அதேபோல பிரேசில் இடம்பெற்றுள்ள சி பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து அணி ஒரு அணியாக ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேசில் அணி தனது முதல் போட்டியில் டிரா செய்துள்ள நிலையில், ஸ்காட்லாந்து அணியுடன் தனது இறுதி லீக் ஆட்டத்தை ஆடவுள்ளது. இதனால் குழு பிரிவில் முதலிடம் பிடிக்க அந்த போட்டியில் பிரேசில் அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

