சிதைந்த அல்கராஸின் ஹாட்ரிக் கனவு.. புதிய சரித்திரம் படைத்த சின்னர்!
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில், ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் ஸ்பெயினைச் சேர்ந்த அல்கராஸும், உலகின் முதல்நிலை இத்தாலி வீரருமான சின்னரும் மோதினர். முதல் செட்டில் 4-6 என்ற கணக்கில் பின்தங்கிய சின்னர், பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்த செட்களில் ஆதிக்கம் செலுத்தினார். சுமார் 3 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 4-6, 6-4, 6-4, 6-4, என்ற செட் கணக்கில் அல்கராஸை வீழ்த்தி சின்னர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற சின்னருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 34 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. தவிர, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், அல்கராஸிடம் அடைந்த தோல்விக்கும், விம்பிள்டன் வெற்றி மூலம் சின்னர் பழி தீர்த்துக் கொண்டார். அதுமட்டுமின்றி, 5 முறை அல்கராஸிடம் அடைந்த தொடர் தோல்விக்கும் சின்னர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வெற்றி குறித்து சின்னர், “இந்த தருணத்தை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். ஒவ்வொரு பயிற்சியிலும் நான் நிறைய தீவிரம் காட்டினேன். ஏனென்றால் நான் மிகவும் சிறப்பாக விளையாட முடியும் என்று உணர்ந்தேன். இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணம். இதற்காக நான் அழவில்லை. ஏனென்றால் எனக்கும் என்னுடன் நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே நாங்கள் மைதானத்திலும் வெளியேயும் என்ன அனுபவித்தோம் என்பது தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.