டெய்லர் கடையில் டெய்லர்: சேவாக்- ராஸ் ’இந்தி’ விளையாட்டு!

டெய்லர் கடையில் டெய்லர்: சேவாக்- ராஸ் ’இந்தி’ விளையாட்டு!
டெய்லர் கடையில் டெய்லர்: சேவாக்- ராஸ் ’இந்தி’ விளையாட்டு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ராஸ் டெய்லரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர், வீரேந்திர சேவாக்கும் ட்விட்டரில் ஜாலியாக விளையாடுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ராஸ் டெய்லரும் லாதமும் சதம் அடித்திருந்தனர். இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட சேவாக், டெய்லரை தையல்காரர் (டர்ஜி) என்று உருதுவில் மொழி பெயர்த்து, ’தீபாவளி ஆர்டரின் அழுத்தத்துக்குப் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள், டெய்லர்ஜி’ என்று கூறியிருந்தார்.

இதற்கு ராஸ் டெய்லர் அளித்த பதில்தான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஏனென்றால் அவர் இந்தியில் பதிலளித்திருந்தார். 

‘நன்றி சேவாக்ஜி. அடுத்த முறை தீபாவளிக்கு முன்னால் உங்க ஆர்டரை கொடுத்துவிடுங்கள். நான் அடுத்த தீபாவளிக்கு முன்னால் அதை உங்களுக்கு கொடுத்துவிடுவேன்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அடுத்த போட்டியிலும் ராஸ் டெய்லர்- லாதம் பார்டனர்ஷிப் சிறப்பாக ஆடியதை குறிப்பிட்ட சேவாக், ‘உங்களின் உயர்தரமான தையலுக்கு முன், யாரும் நிற்க முடியாது. அது பேன்டாக இருந்தாலும் பார்டனர்ஷிப்பாக இருந்தாலும்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராஸ் டெய்லர் இன்ஸ்டாகிராமில் டெய்லர் கடையின் முன் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘ராஜ்கோட்டில் நடந்த போட்டி முடிந்த பின், தையல்கடை மூடப்பட்டிருந்தது. அடுத்த வேலை திருவனந்தபுரத்தில்.  கண்டிப்பாக வர வேண்டும்’ என்று இந்தியில் பதிவிட்டிருந்தார்.

விடாத சேவாக், ’டெய்லரின் சிறப்பான இந்தி புலமைக்காக, ஆதார் கிடைக்குமா அவருக்கு?’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆதார் நிறுவனம், 'மொழி பிரச்சினையல்ல. குடியுரிமைதான் முக்கியம்' என்று தெரிவித்தது. 

'எவ்வளவு வேடிக்கையை கண்டாலும் கடைசி சிரிப்பை அரசின் வேடிக்கைதான் வரவைக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் சேவாக்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com