புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் தேர்வு.. யுவராஜ் சிங் தான் காரணமா?
மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்வுத் குழுத் தலைவர் அஜித் அகர்கர், “நாம் கேப்டன்களை ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்பயணங்களுக்காகத் தேர்வு செய்வதில்லை. நமது அணியை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சில சமயம் இதுபோன்ற முதலீட்டை செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுப்மன் கில்லிடம் நல்ல முன்னேற்றம் உள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உள்ள 5 போட்டிகள் நிச்சயம் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தனது பணியை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அதனால்தான் அவரை கேப்டனாக தேர்வு செய்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டிருப்பதற்கு யுவராஜ் சிங் அவருக்கு வழங்கிய வழிகாட்டுதல்தான் காரணம்” என அவரது தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இன்று சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர், நீண்டகாலம் கேப்டனாக இருப்பார். அதற்கு யுவராஜ் சிங் அளித்த ஆலோசனைகள் மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்துள்ளது. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த மூளையை உடைய யுவராஜ் சிங் போன்ற ஒருவர் சுப்மன் கில்லை தனது சிறகுக்குள்ளே வைத்துப் பார்த்துக் கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம்" எனத் தெரிவித்துள்ள யோகராஜ் தன் மகனை இதன்மூலம் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை, தன் கேப்டன்ஷிப் மூலம் அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், இந்த சீசனில் 600 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பதால் கில்லின் பேட்டிங் திறனும் பேசப்படுகிறது.