இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது ஏன்?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தச் சூழலில் ரோகித் சர்மாவும் மற்றும் விராட் கோலியும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து இந்திய அணியை தேர்வு செய்வதில் நெருக்கடி ஏற்பட்டது.
எனினும், நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அணியில் தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் சாய் சுதர்சனும் இடம்பிடித்துள்ளார். இவருடன் அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், “ஒரு தொடருக்காக, இரண்டு தொடருக்காக கேப்டனை தேர்வு செய்ய முடியாது எதிர்காலத்தைத் திட்டமிட்டுத் தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் அவர் வளர்ச்சியைப் பார்த்து உள்ளோம். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
முகமது ஷமி, இந்த தொடரில் முழு தகுதியோடு இல்லை. ஏதேனும் ஒருகட்டத்தில் அவர் விளையாடுவார் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், அவருக்கு உடல் தகுதி இல்லை என்பதால் தேர்வு செய்யப்படவில்லை.
4ஆம் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது குறித்து கம்பீர் மற்றும் கில் இங்கிலாந்து சென்றபின் முடிவு செய்வார்கள். அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் எப்போது ஓய்வு பெற்றாலும் அவர்கள் இடத்தை நிரப்புவதில் சிக்கல் இருக்கும். ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே விராட் தன்னுடைய முடிவை கூறியிருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.