
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெறும் 13 பந்துகளிலேயே அரை சதமடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல், பேட் கம்மின்ஸ் தலா 14 பந்துகளில் அரை சதமடித்ததே சாதனையாக இருந்தது.
நேற்றைய போட்டியில் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் விளாசி சரவெடியாக விளையாடினார் ஜெய்ஸ்வால். இவரது அதிவேக அரைசதம் ரசிகர்கள் மத்தியில் மிரட்சியை ஏற்படுத்தியது. ஜெய்ஸ்வால் அதிரடியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜெய்ஸ்வாலின் அடியை பார்த்து மிரண்டுபோன விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுதான்" என்று புகழ்ந்து தள்ளினார்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பதிவில், ''இந்த பையன் ஸ்பெஷல். இவரின் ஆட்டம் முழுவதையும் ரசித்துப் பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் ஜெய்ஸ்வால் வென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்றையப் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், “இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் நான் 3வது இடத்தில் விளையாட விரும்புகிறேன். இது எனது கனவு. ரோகித் என்னைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று உணர்ச்சிவசத்துடன் பேசினார்.
மேலும் அவர், “இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் நினைத்தது எல்லாம் நடந்துவிட்டது என நினைக்கவில்லை. முன் தயாரிப்புகளிலும் வழிமுறைகளிலுமே அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். அவற்றில் நான் சரியாக இருந்தால் தேவையான ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும்.
போட்டியை கடைசி வரை நின்று முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது எப்போதுமே என்னுடைய விருப்பமாக இருந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் அதையே செய்ய விரும்புகிறேன். அணியின் வெற்றிக்காக அடித்த அந்த வின்னிங் ஷாட் தான் என்னுடைய ஃபேவரைட் ஷாட்” என்று கூறினார்.
ஜெய்ஸ்வால் குறித்தோ அவரது சாதனை குறித்தோ ரோகித் சர்மா தற்போதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.