
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கி சிறப்பாக விளையாடினர். இதில் ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்த 35 ரன்களை சேர்த்ததன் மூலம் ஜெய்ஸ்வால் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,000 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால்!
34 போட்டிகளில் 1,000 ரன்களை விளாசியதோடு, ஜெய்ஸ்வால் 145.66 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,000 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் 31 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் சென்னை அணியின் "சின்ன தல" சுரேஷ் ரெய்னா 34 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை குவித்துள்ளார். தற்போது ஜெய்ஸ்வாலும் 34 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை குவித்ததன் மூலம் சுரேஷ் ரெய்னாவுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.