ரஞ்சிப் போட்டி | மும்பையிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.. கேப்டனாக்கும் கோவா?
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கி வந்தார். இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) சான்றிதழை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார். இதையடுத்து, அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜெய்ஸ்வால், இதுவரை 3 போட்டிகளில் விளையாடி (1, 29 மற்றும் 4 ரன்கள்) மொத்தம் 34 ரனகள் மட்டுமே எடுத்திருப்பதும் பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து கோவா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஷம்பா தேசாய், ”அவர் எங்களுக்காக விளையாட விரும்புகிறார். நாங்கள் அவரை வரவேற்கிறோம். அடுத்த சீசனில் இருந்து அவர் எங்களுக்காக விளையாடுவார். ஜெய்ஸ்வால் தேசிய அணியில் இல்லாதபோது கோவாவை சிறப்பாக வழிநடத்த முடியும். அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார், அதனால் அவர் கேப்டனாக இருக்க முடியும். அவரை கேப்டனாய் நியமிக்க பாடுபடுவோம்” என பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மும்பை அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சித்தேஷ் லாட் ஆகியோரும் கோவா அணியில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.