Gujarat Titans | மில்லர், ஷமி இடங்களில் ஆடப்போவது யார்?
ஐபிஎல் ஏலம் முடிந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியும் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை விவாதிக்கொண்டிருக்கிறோம். அவர்களின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது, கடந்த ஆண்டிலிருந்து முன்னேற்றம் கண்டிருக்கிறதா, என்னென்ன பலம், பலவீனம் என்று அலசிக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் பற்றிப் பார்ப்போம்.
5 வீரர்களை தக்கவைத்திருந்த குஜராத் டைட்டன்ஸ், இந்த ஏலத்தின் ஆரம்பித்திலேயே அதிரடியாக செயல்பட்டது. பட்லர், சிராஜ், ரபாடா என மார்க்கீ பட்டியலிலேயே மூன்று வீரர்களை வாங்கிப்போட்டது. மேலும், கிளென் ஃபிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், பிரசீத் கிருஷ்ணா போன்ற முன்னணி வீரர்கள் பலரையும் வாங்கியிருக்கிறார்கள். இந்த ஏலத்தில் முழு கோட்டாவான 25 இடங்களையும் நிரப்பிய மூன்று அணிகளுள் டைட்டன்ஸும் ஒன்று. சாய் கிஷோர், இஷாந்த் ஷர்மா, அனூஜ் ராவத் என அனுபவம் நிறைய வீரர்கள் பலரையும் பேக் அப் ஆப்ஷன்களாக வாங்கியிருப்பது அவர்கள் செய்திருக்கும் நல்ல விஷயம்.
மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள்
ஜோஸ் பட்லர் (15.75 கோடி), பிரசித் கிருஷ்ணா (9.5 கோடி), கரிம் ஜனத் (75 லட்சம்), கிளென் ஃபிலிப்ஸ் (2 கோடி), செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (2.6 கோடி), இஷாந்த் ஷர்மா (75 லட்சம்), மஹிபால் லோம்ரோர் (1.7 கோடி), குமார் குஷாக்ரா (65 லட்சம்), அனுஜ் ராவத் (30 லட்சம்), நிஷாந்த் சிந்து (30 லட்சம்), வாஷிங்டன் சுந்தர் (3.2 கோடி), முகமது சிராஜ் (12.25 கோடி), அர்ஷத் கான் (1.3 கோடி), ககிஸோ ரபாடா (10.75 கோடி), சாய் கிஷோர் (2 கோடி), மானவ் சூதர் (30 லட்சம்), ஜெயந்த் யாதவ் (75 லட்சம்), ஜெரால்ட் கோட்சி (2.4 கோடி), குர்னூர் பிரார் (1.3 கோடி), குல்வந்த் கெஜ்ரோலியா (30 லட்சம்)
ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:
சுப்மன் கில் (16 கோடி), ரஷீத் கான் (18 கோடி), சாய் சுதர்ஷன் (8.5 கோடி), ராகுல் தெவேதியா (4 கோடி), ஷாரூக் கான் (4 கோடி)
குஜராத் டைட்டன்ஸ் சிறந்த பிளேயிங் லெவன்
1) ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்)
2) சுப்மன் கில் (கேப்டன்)
3) சாய் சுதர்ஷன்
4) ஷாரூக் கான்
5) செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்
6) ராகுல் தெவேதியா
7) ரஷீத் கான்
8) வாஷிங்டன் சுந்தர்
9) ககிஸோ ரபாடா
10) முகமது சிராஜ்
11) பிரசித் கிருஷ்ணா
இம்பேக்ட் பிளேயர் ஆப்ஷன்கள்: சாய் கிஷோர், நிஷாந்த் சிந்து அல்லது மஹிபால் லோம்ரோர்
பல அணிகளைப் போல் டைட்டன்ஸும் கடந்த சீசனிலிருந்து சில நல்ல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் விஷயத்தில் இந்த முறை நல்ல அனுபவமிக்க பெயர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இருந்து வந்த விக்கெட் கீப்பர் தொல்லை தீர்ந்திருக்கிறது. பட்லர் இருப்பதால், ஓப்பனிங்கும் இன்னும் பலமடைந்திருக்கிறது. டேவிட் மில்லரை இழந்திருந்தாலும், அவர் இடத்தில் வளர்ந்து வரும் சென்சேஷன் செர்ஃபேன் ரூதர்ஃபோர்டை வாங்கி நிரப்பியிருக்கிறார்கள். ரபாடாவை வாங்கி பந்துவீச்சையும் பலப்படுத்தியிருக்கிறார்கள்.
பௌலிங் என்று பேசும்போது இந்த முறை பல மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். 2024ல் ஷமி இல்லாதது சிக்கலை ஏற்படுத்தியதால், இளம் வீரர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாததால், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா என்று அனுபவ வீரர்கள் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். நூர் அஹமதுவை விட்டு வாஷிங்டன் சுந்தரை எடுத்திருப்பதால், இரண்டாவது வெளிநாட்டு பௌலரை வேகப்பந்துவீச்சாளராகப் பயன்படுத்துவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அணியில் ஒரு பலவீனத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அவர்களின் டெத் பௌலிங்கைக் குறிப்பிடலாம். பிரசித், சிராஜ் இருவரும் டெத் ஓவர்களில் அவ்வளவு சிறப்பாக செயல்படுபவர்கள் அல்ல. அது ரபாடா மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஆனால், ரஷீத் கானை வைத்து அதையும் கூட ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும்.
பேக் அப் ஆப்ஷன்களாகவும் நிறைய நல்ல வீரர்கள் இந்த அணியில் இருக்கிறார்கள். சிராஜுக்கு இஷாந்த், ரபாடாவுக்கு கோட்சி, ரூதர்ஃபோர்டுக்கு கிளென் ஃபிலிப்ஸ், வாஷிங்டனுக்கு சாய் கிஷோர் என ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.