SRH | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இஷன் ஆடப்போவது எங்கே?
2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பல கோடிகள் கொட்டப்பட்ட அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் பல புதிய வீரர்களை வாங்கி தங்கள் புதிய அணியைக் கட்டமைத்திருக்கிறார்கள். இந்த புதிய அணிகள் எப்படி இருக்கின்றன, அவர்களின் சிறந்த லெவன் எப்படி இருக்கும், அதன் பலம், பலவீனங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் கடந்த சீசனின் ரன்னர் அப் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பற்றி அலசுவோம்.
இந்த ஏலத்தில் வெறும் 45 கோடியுடன் மட்டுமே நுழைந்திருந்தாலும், பெரிதாக சிரமம் கொள்ளாமல் சில பெரிய வீரர்களை வாங்கியது சன்ரைசர்ஸ். ஒரு சில வீரர்களுக்கு பெரும் தொகை கொடுக்க அவர்கள் தயங்கவில்லை. அதனால் இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோரை அவர்களால் வாங்கி அணியைப் பலப்படுத்த முடிந்தது.
மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள்
முகமது ஷமி (10 கோடி), இஷான் கிஷன் (11.25 கோடி), ஆடம் ஜாம்பா (2.4 கோடி), அபினவ் மனோகர் (3.2 கோடி), ஜெய்தேவ் உனத்கட் (1 கோடி), அதர்வா தைடே (30 லட்சம்), ஹர்ஷல் படேல் (8 கோடி), அனிகேத் வெர்மா (30 லட்சம்), எசான் மலிங்கா (1.2 கோடி), ராகுல் சஹார் (3.2 கோடி), ஜீசன் அன்சாரி (40 லட்சம்), சச்சின் பேபி (30 லட்சம்), கமிந்து மெண்டிஸ் (75 லட்சம்), பிரைடன் கார்ஸ் (1 கோடி), சிமர்ஜித் சிங் (1.5 கோடி)
ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:
டிராவிஸ் ஹெட் (14 கோடி), எய்ன்ரிச் கிளாசன் (23 கோடி), பேட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் ஷர்மா (14 கோடி), நித்தீஷ் குமார் ரெட்டி (6 கோடி)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிறந்த பிளேயிங் லெவன்
1) டிராவிஸ் ஹெட்
2) அபிஷேக் ஷர்மா
3) இஷான் கிஷன்
4) எய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்)
5) நித்தீஷ் குமார் ரெட்டி
6) அபினவ் மனோகர்
7) பேட் கம்மின்ஸ் (கேப்டன்)
8) ஹர்ஷல் படேல்
9) ராகுல் சஹார்
10) ஆடம் ஜாம்பா
11) முகமது ஷமி
இம்பேக்ட் ஆப்ஷன்கள்: ஜெய்தேவ் உனத்கட், சிமர்ஜித் சிங், அதர்வா தைடே
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இந்த பிளேயிங் லெவனைப் பார்க்கும்போது நிச்சயம் நிறைய அப்கிரேட்களைக் காண முடிகிறது. ராகுல் திரிபாதி இடத்தில் இஷன் கிஷன் பெரிய அப்கிரேட். ஸ்பின்னராக ராகுல் சஹார் மற்றும் ஆடம் ஜாம்பா வந்திருப்பது 100 சதவிகித முன்னேற்றம். புவி இடத்தில் ஷமியும், நடராஜன் இடத்தில் ஹர்ஷல் படேலும் வந்திருக்கிறார்கள். இது கொஞ்சம் டெத் ஓவர் பந்துவீச்சை பலவீனப்படுத்தியிருக்கிறது. ஆனால், மிகவும் கொஞ்சம் தான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கடந்த சீசன் ஃபைனலில் ஆடிய பிளேயிங் லெவனை விட இந்த பிளேயிங் லெவன் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது. ஆனால், ஒரு சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
இந்த லெவனின் டாப் 3 வீரர்கள் அனைவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். இது எதிரணிகள் ஆஃப் ஸ்பின்னரை வைத்து டார்கெட் செய்ய உதவி செய்வதாக இருக்கலாம். சூப்பர் கிங்ஸ், டைட்டன்ஸ், ராயல்ஸ் போல் ஆஃப் ஸ்பின்னர்கள் கொண்ட அணிகள் நிச்சயம் இவர்கள் டாப் ஆர்டரை டார்கெட் செய்ய நினைப்பார்கள். அந்த மூன்று பேருக்குப் பிறகு மிடில் ஆர்டர் முழுவதும் வலது கை பேட்ஸ்மேன்கள் தான்!
அவர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை ஃபினிஷிங். 6 மற்றும் 7 ஆகிய இடங்களில் அபினவ் மனோகர் மற்றும் கம்மின்ஸ் ஆடவேண்டும். அவர்கள் இருவருமே பேட்டிங்கில் நல்ல பங்களிப்புகளைக் கொடுத்தவர்கள் தான் என்றாலும், ஃபினிஷர்களாக அவர்களது செயல்பாட்டை முழுமையாக நம்பிட முடியாது. இதை சரிசெய்ய வேண்டுமென்றால் அவர்கள் கிளாசனை கீழே இறக்கவேண்டும். ஒருவேளை, அது பலன் கொடுக்கலாம்.
பிளேயிங் லெவனுக்கும், ஸ்குவாடுக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் முக்கிய வீரர்கள் காயமடைந்தால் அதற்கு ஏற்ற பேக் அப் ஆப்ஷன்கள் இல்லை. கிளாசனோ, ஹெட்டோ ஆட முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களிடம் இருக்கும் பேக் அப், தற்போது டெஸ்ட் அரங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் கமிந்து மெண்டிஸ் தான். அதனால், இது அவர்களுக்குப் பிரச்சனையாக முடியலாம்.