ஆஸ்திரேலியாவிற்கு எதிராக படுதோல்வி.. WIக்கு ஆலோசனை வழங்க மூத்த வீரர்களுக்கு அழைப்பு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் செயல்திறனை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு புகழ்மிக்க சாதனையாளர்களான கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாராவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள அணியை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க வேண்டும் என மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் கிஷோர் ஷாலோ முன்னாள் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், ஷிவ்நாராயண் சந்தர்பால், இயன் பிராத்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 27 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில், கிரிக்கெட் உலகை ஆண்ட அணி, வீழ்ச்சியில் இருந்து மீண்டெழ வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.