2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான போட்டிகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில் 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்த ஆர்சிபி அணிக்கும், ஒரு போட்டியில் கூட தோற்காத ராஜஸ்தான் அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் இன்றைய போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டூபிளெசி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் டூபிளெசி விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் இருந்த விராட் கோலி ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்தார்.
பவர்பிளேவின் 6 ஓவர் முடிவில் முதன்முறையாக இந்த சீசனில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிய ஆர்சிபி அணி 50 ரன்களை குவித்தது. மிடில் ஓவரில் விராட் கோலி நிதானமாக ஆட, அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய டூபிளெசி ரன்களை எடுத்துவந்தார். முதல் விக்கெட்டுக்கே 125 ரன்களை சேர்த்த ஆர்சிபி அணி, நல்ல அடித்தளத்தை அமைத்தது.
டூபிளெசி 44 ரன்களில் வெளியேற அடுத்துவந்த க்ளென் மேக்ஸ்வெல் 1 ரன், சௌரவ் சவ்ஹன் 9 ரன் மற்றும் கேம்ரான் க்ரீன் 5 ரன்கள் என அடித்து சொதப்பினார். ஆனால் இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி, தனியொரு ஆளாக போராடினார். 72 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 113 ரன்கள் குவித்து அசத்தினார். 8வது ஐபிஎல் சதத்தை விராட் கோலி எடுத்துவர 20 ஓவர் முடிவில் 183 ரன்களை சேர்த்தது ஆர்சிபி அணி.
184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே ஜெய்வால் விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது.