
ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார் விராட் கோலி.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஐதராபாத் அணியில் கிளாசென் மிகச் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடக்கம். பின்பு களமிறங்கிய பெங்களூரு அணியின் கோலி மற்றும் டூபிளசிஸ் அதிரடியாக விளையாடினர். இதில் கோலி 62 பந்துகளில் சதமடித்து ஐதராபாத்தின் வெற்றியை தடுத்தார். இதனால் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு.
ஐதராபாத் அணிக்கு எதிரான சதத்தின் மூலம் ஐபிஎல்லில் அதிகபட்சமாக 6 சதங்களை விளாசியுள்ள கிரிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் ஆர்சிபி அணிக்காக 7500 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் கோலி படைத்துள்ளார். இதேபோல இந்த ஐபிஎல் சீசனில் 500 ரன்களை விராட் கோலி பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆறு முறை விராட் கோலி 500 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்திருக்கிறார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ரோகித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். இதுவரை விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் ஏழு சதம் அடித்திருக்கிறார்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு ஐபிஎல்லில் கோலி சதம் அடித்திருக்கிறார். இதை போன்று டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி படைத்திருக்கிறார். இந்த இன்னிங்ஸ் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பாராட்டி பேசியுள்ளார். அதில் "இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது முதல் பந்தில் கவர் டிரைவ் ஆடியதை பார்த்தவுடனே எனக்கு தெரிந்துவிட்டது, இன்றைய நாள் விராட் கோலிக்கானது என்று. கோலி - டூப்ளசிஸ் இருவரும் ஆட்டத்தில் முழு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். " என்றார்.