"காலம் வரும்போது ஹர்திக்கின் புகழ் பாடுவார்கள்" - மும்பை இந்தியன்ஸ் ஜாம்பவான் கெய்ரன் பொல்லார்ட்

ஹர்திக் பாண்டியா கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அதற்கான பலன் சீக்கிரம் தெரியவரும்
Hardik pandya
Hardik pandyaKunal Patil

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதுவரை இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. அதுமட்டுமல்லாமல் சீசன் தொடங்குவதற்கு முன்பிருந்தே கேப்டன்சி மாற்றத்தால் ரசிகர்கள் பொங்கி எழுந்திருந்தார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆட்டத்தின் போதும் கூட தொடர்ந்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அந்த கோஷங்கள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மும்பை இந்தியன்ஸின் அணியின் பேட்டிங் கோச் கெய்ரன் பொல்லார்ட், காலம் வரும்போது மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் புகழ் பாடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Hardik pandya
ஹர்திக் பாண்டியா மீது தொடரும் விமர்சனங்கள். கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் தொடரும் தடுமாற்றம்!

தொடர்ச்சியாக ரசிகர்கள் ஹர்திக் மீது அதிருப்தியை தெரிவித்துக்கொண்டிருக்க, அது அவரது ஆட்டத்தையும் பாதிப்பது போல் தெரிகிறது. சென்னைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் கூட இதுபற்றிப் பேசியிருந்தார். "ஹர்திக் பாண்டியா டாஸின் போது ரொம்பவே சிரிக்கிறார். ஆனால், அவர் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. அது அவரது ஆட்டத்தையும் பாதிக்கிறது. அவர் ஒரு இந்திய வீரர். அவருக்கு இப்படி நடப்பது சரியல்ல" என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் அணுகுமுறை குறித்தும், அது ஹர்திக்கின் ஃபார்மில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் சூப்பர் கிங்ஸ் போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பொல்லார்டிடம் கேட்கப்பட்டது. இதுபற்றிப் பேசிய அவர், "இது அவரின் நம்பிக்கையை குலைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மிகவும் உறுதியான வீரர். அணியுடன் அவர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உங்களுக்கு நல்ல நாள்களும் இருக்கும், மோசமான நாள்களும் இருக்கும். நான் பார்ப்பது, ஒவ்வொரு நாளும் உறுதியோடு போராடிக்கொண்டே இருக்கும் ஒரு அற்புதமான வீரரை!" என்று கூறினார்.

"ஒரு தனிப்பட்ட வீரரை அனைத்து பிரச்னைகளுக்கும் கை காட்டுவது எனக்கு எரிச்சலாக இருக்கிறது. இறுதியில் கிரிக்கெட் ஒரு டீம் கேம். இது, இன்னும் 6 வார காலத்தில் இந்திய அணிக்காக விளையாடப்போகும் ஒரு வீரரை. அப்போது அனைவருமே அவர் நன்றாக ஆடவேண்டும் என்று விரும்புவார்கள். அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதனால் சீக்கிரமே அவரை குறை சொல்வதை நிறுத்திவிட்டு அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்குவது நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில், இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களின் ஒருவரிடமிருந்து இந்திய அணி முழுமையான செயல்பாட்டைப் பெறவேண்டும். அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும், பௌலிங் செய்ய முடியும், ஃபீல்டிங் செய்ய முடியும், அவரால் அணியின் துருப்புச் சீட்டாக விளங்க முடியும்.

அவரால் இதையெல்லாம் கடந்து வர முடியும் என்று நான் மனதார வேண்டிக்கொள்கிறேன். நான் விரைவிலேயே அவர் புகழை அனைவரும் பாடும் நாளுக்கு காத்திருப்பேன்" என்று கூறினார்.

ஹர்திக்கின் பேட்டிங்குமே இந்த சீசனில் பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் மொத்தம் 131 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் அவரது ஸ்டிரைக் ரேட்டும் மிகவும் மோசமாக இருக்கிறது. இதுபற்றியும் பத்திரிகையாளர் சந்திப்பில் பொல்லார்டிடம் கேட்கப்பட்டது. "ஒரு தனி நபராக நீங்கள் பல கட்டம் கடந்து வரவேண்டும். ஆரம்ப காலத்தில் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு விதமாகக் கையாள்வீர்கள். வயதாகும்போது, உங்களுக்குப் பொறுப்புணர்வு வரும். ஹர்திக் பாண்டியா வளர்ந்து வருவதை நான் கவனித்துவருகிறேன். அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அதற்கான பலன் சீக்கிரம் தெரியவரும்" என்று கூறினார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com