‘அஸ்வினும், தோனியும் செய்ததை..’ - கடைசிப் பந்தில் அடுத்தடுத்து சொதப்பிய ஹர்ஷல், தினேஷ் கார்த்திக்!

ரவி பிஷ்னோய் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறுவதை கடைசி நொடியில் கவனித்த ஹர்ஷல் பட்டேல், நொடிப்பொழுதில் மன்கட் செய்ய முயற்சித்து பந்தை தூக்கி எறிந்தார்.
ஹர்ஷல் பட்டேல்,
ஹர்ஷல் பட்டேல்,ஆர்சிபி

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் முதல் வாரம் முடிந்து, இரண்டாவது வாரம் பரபரப்பையும் தாண்டி, பல ட்விஸ்டுகளுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் ஒவ்வொருப் போட்டியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் அணிக்கு எதிராக நடந்த 13-வது லீக் போட்டியில், கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கின் 5 பந்துகளில் 5 சிக்ஸர்களும், நேற்று ஆர்சிபி அணியுடனான போட்டியில், 15 பந்துகளில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரனின் அரை சதமும் ரசிகர்களுக்கு ஒருவித ஆச்சரியத்தை தந்தது.

நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன்ட்விட்டர்

ஆனால், அதையெல்லாம் தாண்டி ஆர்.சி.பி. அணியின் பௌலர் ஹர்ஷல் பட்டேல், லக்னோ அணிக்கு எதிராக வீசிய கடைசி பந்துதான் தற்போது பேசுப் பொருளாகியுள்ளது. 15-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்ததையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உள்பட அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆட்டம் பெங்களூரு அணிக்கு சாதகமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (30 பந்துகளில் 65 ரன்கள்) மற்றும் நிக்கோலஸ் பூரன் (19 பந்துகளில் 62 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் அந்த அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றது. இதனால் அந்த அணி வெற்றிப்பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், கடைசி ஓவரில் பெங்களூரு அணி ஜெயிக்க வாய்ப்பிருந்தும் பௌலர் ஹர்ஷல் பட்டேல் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் சிறு தவறுகளால் அந்த அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டுள்ளதாக ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லக்னோ அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, அந்த ஓவரை வீச வலதுகை பந்துவீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் வந்தார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் உனத்கட் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில், மார்க் வுட் அவுட்டானார். இதனால் ரவி பிஷ்னோய், உனத்கட்டுடன் கூட்டணி அமைத்தார். அதன்பிறகு 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் லக்னோ வீரர் ரவி பிஷ்னோய். அப்போது லக்னோ வெற்றிபெற 2 ரன்களும், போட்டி டையில் முடிய ஒரு ரன்களும் தேவை என்ற சமயத்தில், 4-வது பந்தில் ஜெட் வேகத்தில் ஓடி ஒரு ரன் எடுத்தனர் லக்னோ வீரர்கள்.

ஹர்ஷல் பட்டேல்,
”நீங்கலாம் வேற லெவல்” - வாட்சன், டூ பிளசிஸ் போல் முழங்காலில் ரத்தம் கசிய விளையாடிய சாண்ட்னர்!

அப்போது இரண்டு அணிகளின் ஸ்கோர்களும் சமநிலையில் இருந்தன. சூப்பர் ஓவருக்கு செல்லுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்று இருந்தபோது 5-வது பந்தில் உனத்கட் அவுட்டானார். ஆட்டம் பரபரப்பு கட்டத்தை எட்டியபோது கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவை என்றிருந்தநிலையில், ஆவேஷ் கான் களமிறங்கி பந்தை எதிர்கொள்ள காத்திருந்தார்.

கடைசிப் பந்தை வீச ஹர்ஷல் ஓடிவந்தபோது, அவருடன் சேர்ந்து ரவி பிஷ்னோய்யும் கிரீஸிலிருந்து வெளியே சென்றார். பந்தை வீசுவதற்கு முன்பாகவே, ரவி பிஷ்னோய் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறுவதை கடைசி நொடியில் கவனித்த ஹர்ஷல் பட்டேல், நொடிப்பொழுதில் மன்கட் செய்ய முயற்சித்து பந்தை தூக்கி எறிந்தார். ஆனால், அதற்குள் ரவி பிஷ்னோய் வேகமாக ஓடி தனது இடத்திற்கு வந்துவிட்டார். இதனால் எளிதாக மன்கட் செய்ய வாய்ப்பிருந்தும் முடியாமல் போனது.

இதனையடுத்து, மீண்டும் கடைசி பந்தை ஹர்ஷல் பட்டேல் வீசியபோது, ஆவேஷ் கான் அடிக்காமல் விட்ட பந்து நேராக கீப்பரான தினேஷ் கார்த்திக் கைக்கு சென்றது. ஆனால், பந்தை சரியாக பிடிக்காமல், தட்டுத் தடுமாறி கையில் எடுத்த தினேஷ் கார்த்திக் தனது பக்கத்தில் இருந்த ஸ்டெம்பில் அடிக்காமல், எதிர்ப்புறம் ஓடிய ஆவேஷ் கானை ரன் அவுட் செய்ய தூக்கி அடிக்க முயற்சிசெய்து பந்தை போடுவதற்குள் லக்னோ வீரர்கள் ஒரு ரன் எடுத்திருந்தனர்.

மேலும் தினேஷ் கார்த்திக் வீசிய பந்தை பிடிக்க முயற்சிசெய்து பெங்களூரு வீரர்கள் குவிந்த நிலையில், அவர்களை தாண்டி ஓடிய ஆவேஷ்கான் ஒரு ரன் எடுத்து வெற்றிபெற்ற நிலையில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார்.

இதனால் லக்னோ - பெங்களூரு அணி பங்குபெற்றப் போட்டியின் கடைசி ஓவரில் ஏராளமான டிராமாக்கள் நடைபெற்றதை குறிக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், என்ன மாதிரியான விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ளதுடன், “தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் கடைசிப் பந்தில் ரன் அவுட் செய்ய வாய்ப்பிருந்தும் தவறவிட்டனர். ஆனாலும் சிறப்பான ஆட்டம். பூரனின் ஆட்டம் சிறப்பானது. ஐபிஎல் தொடரில் 2 நாட்களாக நடைபெற்ற இரண்டு ஆட்டங்களும் சிறப்பு வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்று தோனி செய்ததை இன்று தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்!

அஸ்வின் போல மன்கட் செய்ய ஹர்ஷல் பட்டேல் தவறிவிட்டார் என பலரும் குறிப்பிட்டனர். அதேபோல், வங்கதேசத்திற்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி ஒன்றில் இதுபோன்ற சூழல் வரும். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருக்கும். ஹர்திக் பாண்டியா அந்த பந்தினை வீசி இருப்பார். இந்தப் போட்டியைப் போல் வங்கதேச வீரர் பந்தினை அடிக்காமல் மிஸ் செய்திருப்பார். இருப்பினும் எப்படி ஆவது ஓடி ஒரு ரன் எடுத்தால் ஆட்டம் டை ஆகிவிடும் என வங்கதேச வீரர்கள் ஓடுவார்கள். ஆனால், தோனி இருந்த இடத்தில் இருந்து பந்தினை வீசி ரன் அவுட் செய்யாமல், ஓடி ஸ்டம்ப் அருகில் சென்று ரன் அவுட் செய்திருப்பார். சரியாக கணித்து ரன் அவுட் செய்த தோனி, வங்கதேச வீரர்களின் இதயங்களை சிதைத்து இருப்பார். அதேபோன்ற வாய்ப்பு நேற்று தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com