”நீங்கலாம் வேற லெவல்” - வாட்சன், டூ பிளசிஸ் போல் முழங்காலில் ரத்தம் கசிய விளையாடிய சாண்ட்னர்!

“மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு எதிராக எம்.எஸ். தோனி, சான்ட்னர் மற்றும் ஜடேஜாவை சிறப்பாக பயன்படுத்தினார்.”
Santner, Dhoni, watson
Santner, Dhoni, watsonPT

16-வது சீசனின் 12-வது லீக் போட்டி கடந்த சனிக்கிழமை இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி, 18.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

ஜடேஜா, சான்ட்னர்,
ஜடேஜா, சான்ட்னர்,ட்விட்டர்

இந்தப் போட்டியில், ஆர்த்தோடாக்ஸ் சுழற்பந்து வீரர்களான ரவீந்திர ஜடேஜா (4 -20-3) மற்றும் மிட்செல் சான்ட்னரின் (4-28-2) சிறப்பான பந்துவீச்சும், ரஹானேவின் (27 பந்துகளில் 61 ரன்கள்) அதிரடி ஆட்டமும் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பேசியபோதுகூட, “மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு எதிராக எம்.எஸ். தோனி, சான்ட்னர் மற்றும் ஜடேஜாவை சிறப்பாக பயன்படுத்தினார். இந்த இருவரும் விக்கெட்டுகளை எடுப்பதில் மாற்றம் செய்ய முடியும் என்பதை தோனி அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவர்கள் மீது தோனி அதிக நம்பிக்கை காட்டினார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ரவி சாஸ்திரி, தோனி
ரவி சாஸ்திரி, தோனிகோப்புப் படம்

இந்நிலையில், இந்தப் போட்டியின்போது மிட்செல் சான்ட்னர், வலது முழங்காலில் ரத்த காயங்களுடன் விளையாடிய புகைப்படத்தை சென்னை அணி பகிர்ந்துள்ளது. அதில் சான்ட்னருடன், ஷேன் வாட்சன், டூ பிளசிஸ் ஆகியோர், இதற்கு முன்பாக சென்னை அணியில் விளையாடும்போது இரத்த காயங்களுடன் விளையாடியதையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், முழங்கால் பகுதியில் 3 பேருக்குமே காயம் ஏற்பட்டதை குறிக்கும் வகையிலும் knee என்று சேர்த்து நீங்க எல்லாருமே வேற லெவல் (Kneenga Ellarume Vera Level) என்பதையும் சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற 38-வது லீக் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதியது. இதில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது, சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரரான டூ பிளசிஸ் பீல்டிங்கின்போது இடது முழங்காலின் மேல்பகுதியில் காயமடைந்து ரத்தக் காயங்களுடன் விளையாடினார்.

சிறப்பாக பீல்டிங் செய்தது மட்டுமின்றி, ரத்தக் காயங்களுடன் அந்தப் போட்டியில் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற உதவினார். அந்த சீசனில், இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது கோப்பையை வென்றது.

அதற்கு முன்னதாக சென்னையின் துவக்க ஆட்டக்காரரான ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் இடது முழங்கால் பகுதியில் ரத்த காயங்களுடன், 2019-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணி மோதியது. இரண்டு அணிகளுமே 4-வது கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது.

அந்தப் போட்டியில், முதலில் விளையாடிய மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சை துவங்கிய சென்னை அணியின் தோனி உள்பட முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரத்த காயங்களுடன் பேட்டிங் செய்த ஷேன் வாட்சன், 59 பந்துகளை சந்தித்து 80 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். இதனால், சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது 4-வது சாம்பியன் பட்டத்தை வென்றாலும், வாட்சனின் போராட்டக் குணமே பெரிதாக அன்று பேசப்பட்டது. போட்டி முடிந்தப் பின்னர் அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com