ஸ்ரேயாஸ் Vs விராட் கோலி | ”யார் கோப்பையை இழந்தாலும் அது வருத்தமே” - இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி!
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் நாளை (ஜூன் 3) அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காகப் போராடிவரும் பெங்களூரு அணி, நடப்புத் தொடரில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லாத இரு அணிகளும் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்திருப்பதால், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இதையடுத்து, பலரும் வெற்றி பெறும் அணி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியும் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஒருபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு (2020) அழைத்துச் சென்றார். அடுத்து, கொல்கத்தா அணியை கடந்த ஆண்டு கோப்பையை வெல்ல வைத்தார். ஆனால், முக்கியமான தருணங்களில் அவரை அந்த அணிகளே கைவிட்டுவிட்டன; இப்போது 11 வருடங்கள் கழித்து இளம் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மறுபக்கம் கோலி, ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடி, ஆயிரக்கணக்கான ரன்களை குவித்திருக்கிறார். வெற்றியைப் பெற அவரும் தகுதியானவர்தான். எனவே இந்த இருவரில் யார் கோப்பையை இழந்தாலும் அது வருத்தத்துக்கு உரியதாகவே இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.