SRHvMI | ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் மும்பை இந்தியன்ஸ்

சின்ன டெண்டுல்கர், கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.
Cameron Green
Cameron GreenPTI

தங்களது கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு காப்பு கட்டிய இரு அணிகளும், நேற்று இரவு தங்களுக்குள் சண்டை கட்டின. ஹாரி ப்ரூக் மீண்டும் தனது மந்திரக்கோலில் மாயஜாலம் செய்வாரா? சின்னவர் இன்னும் கொஞ்சம் வேகமாய் பந்து வீசுவாரா? சூர்யகுமார் யாதவ்தான் இன்றும் கேப்டனாக செயல்படுவாரா? யான்சன் சகோதரர்கள் களத்தில் மோதிக்கொள்வார்களா? என எக்கசக்க எதிர்பார்ப்புகள். கடைசியில், எதுவும் நடக்கவில்லை. வேறு என்னதான் நடந்தது?

கட்டுரைகளை புதிய தலைமுறை ஆண்டிராய்டு செயலியில் படிக்க க்ளிக் செய்யுங்கள்..!

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. சர்மா கி பேட்டா ரோகித்தும், பாக்கெட் டைனமைட் கிஷனும் மும்பை அணியின் இன்னிங்ஸைத் துவங்கினர். தொன்றுதொட்டு வரும் பவுலிங் பாரம்பரியப்படி, புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். ஓவரின் கடைசிப்பந்தில், கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார் ரோகித். 2வது ஓவரை வீசினார் யான்சன். இம்முறை கடைசிப்பந்தில், சிக்ஸ் அடித்தார் இஷான் கிஷன். 3வது ஓவரை வீசவந்தார் வாஷிங்டன் சுந்தர். முதல் மூன்று பந்துகளையும், அம்மா குத்து, அப்பா குத்து, பிள்ளையார் குத்து என மூன்று பவுண்டரிகளை குத்திவிட்டார் ரோகித். அப்படியே, ஐ.பி.எல் தொடரில் 6,000 ரன்களையும் கடந்தார். 4வது ஒவரை வீசினார் யான்சன். மிட்-ஆன் திசையில் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார் யான்சன்.

5வது ஓவரை வீச, நடராஜனை அழைத்தார் மார்க்ரம். முதல் ஓவர் மிட்-ஆன் திசையில் பவுண்டரிக்கு பறந்தது. 3வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். நடராஜன் வீசிய மெதுவான ஆஃப் கட்டரில், பிடிச்சுக்கோ குத்து என குத்தியதை மார்க்ரம் அழகாக பிடித்தார். புவி வீசிய 6வது ஓவரின், 5வது பந்தில் இஷான் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட, பவர்ப்ளேயின் முடிவில் 53/1 என கவனமாக ஆடிக்கொண்டிருந்தது மும்பை. வாஷி வீசிய 7வது ஓவரில், வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மயங்க் மார்கண்டேவின் 8வது ஓவரில், வெறும் 4 ரன்கள். வாஷிங்டன் வீசிய 9வது ஓவரில், க்ரீன் ஒரு சிக்ஸரை அடித்தும் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10-வது ஓவரில், மார்கண்டேவை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கிஷன். 10 ஓவர் முடிவில், 80/1 என உருட்டியது மும்பை. `பார்த்து ப்ரோ, பந்துக்கு வலிக்கப்போகுது' என க்ரீனைப் பார்த்து வெறியானார்கள் மும்பை ரசிகர்கள்.

Ishan Kishan
Ishan Kishan

11வது ஓவரை வீசிய நடராஜன், 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 12வது ஓவரின் முதல் பந்திலேயே கிஷனின் விக்கெட்டைக் கழட்டினார் யான்சென். பந்தை விரட்டிச் சென்று பாய்ந்து, அற்புதமான கேட்சைப் பிடித்தார் மார்க்ரம். அடுத்து, மூந்நூற்றி அறுபது டிகிரி வீரர் சூர்யகுமார் உள்ளே வந்தார். யான்சனின் பந்தில், 120 டிகிரியில் ஒரு சிக்ஸரை அடித்தவர், அடுத்த பந்திலேயே மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மீண்டும் ஒரு அற்புதமான கேட்ச்! `வானம் கிளம்பிருச்சு, காய்ச்சுடா மோளத்த. மாமேய்' என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் துள்ளி குதித்தார்கள். வாஷி வீசிய 13வது ஒவரில், க்ரீன் ஒரு பவுண்டரி அடித்தார். மார்கண்டேவின் 14வது ஓவரில், ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி அடித்தார் திலக் வர்மா. 15வது ஓவரை வீசிய யான்சன், க்ரீனுக்கு இரண்டு பவுண்டரிகள், திலக் வர்மாவுக்கு இரண்டு சிக்ஸர்கள் என கூறு போட்டு கொடுத்தார். ஒரே ஓவரில், 21 ரன்கள்! 15 ஓவர் முடிவில், 130/3 என யான்சனின் புன்னியத்தில் மீண்டிருந்தது மும்பை.

மார்கண்டேவின் 16வது ஒவரில், திலக் வர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என துவம்சம் செய்தார். 17வது வீசவந்தார் புவனேஷ்வர். 3வது பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, அடுத்த பந்தில் அமைதியாக அவுட் ஆகிவிட்டுச் சென்றார் திலக் வர்மா. நடராஜனின் 18வது ஓவரில், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என இக்கரைக்கும் அக்கரைக்கும் பறக்கவிட்டார் பச்சை. ஒரே ஓவரில் 20 ரன்கள். புவியின் 19வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்தார் நடராஜன். இரண்டு பவுண்டரிகளைத் தட்டிவிட்டு, கடைசிப்பந்தில் ரன் அவுட் ஆனார் டேவிட். 20 ஓவர் முடிவில், 192/5 எதிர்பாராத ஸ்கோரில் இன்னிங்ஸை முடித்தது மும்பை.

Tilak Varma
Tilak Varma-

மூன்று அயல்நாட்டு வீரர்களோடு விளையாடிய மும்பை அணி, திலக் வர்மாவுக்கு பதிலாக மெரிடித்தை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது. ஹாரி ப்ரூக்கும், மயங்க் அகர்வாலும் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் சின்ன டெண்டுல்கர். 4வது பந்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ப்ரூக். 2வது ஓவரை வீசவந்தார் பெஹ்ரன்டார்ஃப். 3வது பந்து, முந்தைய பவுண்டரியின் ரீப்ளே போல பவுண்டரிக்கு சென்று விழுந்தது. அடுத்த பந்து, ஐதராபாத் ரசிகர்களின் நெஞ்சில் இடி விழுந்தது. ஹாரி ப்ரூக் அவுட் ஆனார். சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார்.

Mumbai Indians players
Mumbai Indians players-

3வது ஓவரை வீசிய டெண்டுல்கர், த்ரிப்பாதிக்கு ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கொடுத்தார். 4வது ஓவரை வீசிய பெஹ்ரன்டார்ஃப், த்ரிப்பாதியின் விக்கெட்டையும் கழட்டினார். கிஷனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார் த்ரிப்பாதி. பெஹ்ரன்டார்ஃப் விக்கெட் எடுக்க காரணமே, சின்ன டெண்டுல்கர் தம்பி தரமாக பந்து வீசி அழுத்தம் கொடுத்ததுதான் என பெரிய டெண்டுல்கர் ரசிகர்கள் இருமல்களுக்கு மத்தியில் பாராட்டினர். 5வது ஓவர் வீசிய மெரிடித்தை, ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்த அகர்வால், அடுத்து பெஹ்ரன்டார்ஃபை ஒரு பவுண்டரி அடித்தார். பவர்ப்ளேயின் முடிவில், 42/2 என ஊர்ந்து வந்தது ஐதராபாத் அணி.

7வது ஓவரை வீசிய ஷொகீன், மார்க்ரமுக்கு ஒரு சிக்ஸரை வழங்கினார். சாவ்லாவின் ஓவரில், அகர்வால் ஒரு பவுண்டரி அடித்தார். 9வது ஓவரை வீசிய க்ரீன், முதல் பந்திலேயே மார்க்ரமுக்கு ஒரு பவுண்டரி கொடுத்தாலும், 4வது பந்தில் விக்கெட்டைத் தூக்கினார். ஐதராபாத் ரசிகர்கள் கண்ணீர் விட்டார்கள். 10வது ஓவரின் முதல் பந்தில், அபிஷேக் சர்மாவின் விக்கெட்டைத் தூக்கினார் சாவ்லா. கேட்ச் பிடிச்சது யாரு? நம்ம டேவிட்! 10 ஓவர் முடிவில், 76/4 என பூந்தியாகியது ஐதராபாத் அணி.

Heinrich Klaasen | Mayank Agarwal
Heinrich Klaasen | Mayank Agarwal

மெரிடித்தின் 11வது ஓவரில், அகர்வால் ஒரு பவுண்டரியும், க்ளாஸென் ஒரு பவுண்டரியும் அடித்தனர். 12 ஒவரை வீச வந்தார் சாவ்லா. ஒரு பவுண்டரியைத் தட்டினார் அகர்வால். அடுத்து வந்த க்ரீனை, க்ளாஸென் ஒரு பவுண்டரி அடித்தார். ஐதராபாத் அணிக்கு பெரிய ஓவர் ஒன்று அவசரமாக தேவைப்பட, `ஏமி காவாலா' என வந்தார் சாவ்லா. இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என சிதறிய பூந்தியை மீண்டும் லட்டு பிடித்த க்ளாஸென், அடுத்த பந்திலேயே லட்டு கேட்ச் ஒன்றைக் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். கேட்ச் பிடிச்சது யாரு? நம்ம டேவிட்! இனி அகர்வாலின் ஆட்டம் ஆரம்பம் என நினைக்கையில், அடுத்த ஓவரிலேயே அவரும் காலி. கேட்ச் பிடிச்சது யாரு? நம்ம டேவிட்! 15 ஓவர் முடிவில், 133/6 என போராடிக்கொண்டிருந்தது ஐதராபாத் அணி.

16வது ஓவர் வீசிய க்ரீனை, இரண்டு பவுண்டரிகள் விளாசினார் யான்சென். அடுத்த ஒவரை வீசிய மெரிடித், யான்செனின் விக்கெட்டைக் கழட்டினார். கேட்ச் பிடிச்சது யாரு? நம்ம டேவிட்! 18 பந்துகளில், 43 ரன்கள் தேவை. பெஹ்ரன்டார்ஃபின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து நம்பிக்கைத் தந்த வாஷி, `எந்த டீம் எக்கேடு போனா நமக்கென்ன' எனும் மோடில் ஓடிப்போய் ரன் அவுட் ஆனார். ரன் அவுட் அடிச்சது யாரு? நம்ம டேவிட்! அடுத்து வந்த அப்துல் சமாத், கடைசியாக கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை. 19வது ஓவரை வீசினார் க்ரீன்.வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Arjun tendulkar
Arjun tendulkar-

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மெல்ல புன்னகைத்தனர். கடைசி ஓவரில், 20 ரன்கள் தேவை. போடுகிற 120 கி.மீ வேகத்தில் `ஸ்லோ பால்' வேரியேஷன் காட்டுகிற அர்ஜூன் டெண்டுல்கர், பந்துவீச வந்தார். 2வது பந்தில், அப்துல் சமாத் ரன் அவுட். 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து, மும்பை அணியின் இம்பாக்ட் வீரராக மாறினார். ஓவரின் 5வது பந்தில், புவனேஷ்வரின் விக்கெட்டைத் தூக்கி தனது முதல் ஐ.பி.எல் விக்கெட்டை பதிவு செய்தார் அர்ஜூன் டெண்டுல்கர். கேட்ச் பிடிச்சது யாரு? நம்ம டேவிட் இல்லை. கேப்டன் ரோகித்! சின்ன டெண்டுல்கர், கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி. பேட்டிங்கில் அரைசதம், பவுலிங்கில் ஒரு விக்கெட் என கலக்கிய கேமரூன் க்ரீன், ஆட்டநாயகன் விருது வென்றார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று, ஆட்டத்துக்குள் திரும்பியது மும்பை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com