KKRvSRH | ப்ரூக் அதிரடி சதத்தால், சன்ரைசர்ஸ் வெற்றி..!

13.25 கோடி ரூபாயில் ஏலம் எடுக்கபட்ட ப்ரூக் சொதப்பி வருவதில், `சன்ரைசர்ஸுக்கும் ப்ரூக்கும் எப்படிப்பா செட் ஆகும்?' என தினுசு தினுசான காரணங்களை எல்லாம் சொன்னார்கள் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்.
 Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad PTI

எதிரணி பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் துண்டை விரித்து, நாபிக்கமலத்தில் இருந்து காற்றெடுத்து நாதஸ்வரம் ஊதிக்கொண்டிருந்தால், அவர்கள் அருகிலேயே சிம்பிளாக இன்னொரு துண்டை விரித்து நான்கு ஸ்டெப் நடனத்தை ஆடிவிட்டு வசூல் செய்து கிளம்பிவிடுகிறார்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதைத் தடுக்குமா சன்ரைசர்ஸ்? ஈடன் கார்டனில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 19வது போட்டியில், கேடி நைட் ரைடர்ஸும், கில்லாடி சன்ரைசர்ஸும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.

Harry Brook | Aiden Markram
Harry Brook | Aiden Markram Swapan Mahapatra

ஹாரி ப்ரூக்கும், மயங்க் அகர்வாலும் ஐதராபாத்தின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் உமேஷ். 13.25 கோடி ரூபாயில் ஏலம் எடுக்கபட்ட ப்ரூக் சொதப்பி வருவதில், `சன்ரைசர்ஸுக்கும் ப்ரூக்கும் எப்படிப்பா செட் ஆகும்?' என தினுசு தினுசான காரணங்களை எல்லாம் சொன்னார்கள் சன்ரைசர்ஸ் ரசிகர்கள். உமேஷ் வீசிய முதல் பந்தை, எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார் ப்ரூக். `இதெல்லாம் சும்மா ஃப்ளூக்' என்றார்கள் சன்ரைசர்ஸ் வெறியர்கள். அதே ஓவரின் 4 மற்றும் 5வது பந்தில், மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி, ஷார்ட் ஃபைன் லெக்கில் இன்னொரு பவுண்டரி என வெளுத்தார் ப்ரூக். சன்ரைசர்ஸ் ரசிகர்கள் அமைதியானார்கள்.

ஃபெர்க்யூசன் வீசிய 2வது ஓவரின் 5வது பந்து, அகலபந்தாக மாறி பவுண்டரிக்குள் விழுந்தது. மாற்றாக வீசப்பட்ட பந்தையும், கவர் திசையில் பவுண்டரிக்கு அடித்தார் ப்ரூக். உமேஷ் வீசிய 3வது ஓவரின், கடைசி இரண்டு பந்துகளை கவர் திசையில் ஒன்று, பாயின்ட் திசையில் ஒன்று என சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஹாரி ப்ரூக். `ஹாரி கையிலிருப்பதா மட்டையா இல்லை மந்திரக்கோலா' என மகிழ்ச்சி அடைந்தனர் சன்ரைசர்கள். 4வது ஓவரை வீசவந்தார் நரேன். அத்தனை ரணகளங்களுக்கு மத்தியிலும், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Harry Brook
Harry Brook Swapan Mahapatra

இந்த சீசனில் தனது முதல் ஓவரை வீசவந்தார் ரஸல். முதல் பந்திலேயே மயங்கின் விக்கெட்டைக் கழற்றினார். அரைக்குழியில் வீசப்பட்ட பந்து, அவுட்சைட் எட்ஜாகி, ஷார்ட் தேர்டில் இருந்த வருணின் கையில் விழுந்தது. ராகுல் த்ரிப்பாதி வந்தார். வந்ததும், லாங் லெக் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டினார். பிறகு, அதே ஓவரின் 5வது பந்தில் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுன்டரியை விளாசினார். கொடுமையாக, அடுத்த பந்திலேயே, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பவுன்ஸரை புல் ஷாட் ஆட முயன்று, டாப் எட்ஜாகி, கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் ஆனார். தனது முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார் ரஸல். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் வருண் சக்கரவர்த்தி. ஓவரின் 4வது பந்தை, பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரிக்கு தட்டினார் ப்ரூக். பவர் ப்ளேயின் முடிவில், 65/2 என நன்றாகவே ஆடியிருந்தது சன்ரைசர்ஸ்.

7வது ஓவரை வீசினார் ரஸல். ஓவரின் 5வது பந்தை, டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் மார்க்ரம். இந்த ஓவர் முடிவிலேயே, ரஸலிடம் சின்ன தடுமாற்றம். காலில் ஏதோ பிரச்னை. 8வது ஒவர் வீசிய வருண், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 9வது ஓவரை வீசிய நரைனும் 5 ரன்கள் மட்டுமே. சுயாஷ் சர்மா வீசிய 10வது ஓவரில், பவுலரிடமே கேட்ச் வாய்ப்பை கொடுத்தார் ப்ரூக். வாய்ப்பை தவறவிட்டார் சுயாஷ். ஓவரின் கடைசிப்பந்தில், லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸரை கொளுத்தினார் மார்க்ரம். 10 ஓவர் முடிவில் 94/2 என லேசாக சறுக்கியிருந்தது சன்ரைசர்ஸ்.

Harry Brook
Harry Brook Swapan Mahapatra

நரைன் வீசிய 11வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ப்ரூக். அந்த ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் வந்தார் சுயாஷ். முதல் பந்தையே கவர் திசையில் ஒரு சிக்ஸரை விரட்டினார் மார்க்ரம். 3வது பந்தில், மிட் விக்கெட் திசையில் இன்னொரு சிக்ஸர். 5வது பந்தில், ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி. வருண் வீசிய 13வது ஓவரிலும், லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி, லாங் ஆனில் ஒரு சிக்ஸர் என அறைந்து தனது அரைசதத்தை நிறைவு செய்த மார்க்ரம், அடுத்த பந்திலேயே ரஸலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். மார்க்ரம் கிளம்பிவிட்டதால், சுயாஷிடம் மீண்டும் தைரியமாக பந்தைக் கொடுத்தார் ராணா. சுயாஷும் அற்புதமாக பந்து வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 15வது ஓவரை வீசவந்தார் ஃபெர்க்யூசன். முதல் பந்தை 92 மீட்டருக்கு ஒரு சிக்ஸர் அடித்தார் ப்ரூக். 3வது பந்து, மிட் ஆஃபில் பவுண்டரிக்கு விரைந்தது. 4வது நோபாலாகிப் போக, அதையும் டீப் பாயின்ட்டில் இன்னொரு பவுண்டரி. மறுபடியும் வீசப்பட்ட 4வது பந்தில் மறுபடியும் பவுண்டரி. கடைசியாக, ஓவரின் கடைசிப்பந்தில் பாயின்ட்டில் ஒரு பவுண்டரி. இந்த ஒரு ஓவரில் மட்டும் 23 ரன்கள். வெளுத்து வாங்கினார் ப்ரூக். சுயாஷிடம் மீண்டும் பந்தைக் கொடுத்தார் ராணா. ஓவரின் 3வது பந்தில் அம்பயர் தலைக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார் ப்ரூக். கடைசி இரண்டு பந்துகளை, அபிஷேக் சர்மா பவுண்டரிக்கு விரட்டிவிட்டார். 16 ஓவர் முடிவில், 172-3 என எகிறி குதித்திருந்தது சன்ரைசர்ஸ்.

நரைனையும் விட்டு வைக்கவில்லை, சன்ரைசர்ஸ் வீரர்கள். அவரையும் ஒரு பவுண்டரி, 96 மீட்டரில் ஒரு சிக்ஸர் என வெளுத்தார் அபிஷேக் சர்மா. `தலைவன் தாக்கூர் கிட்டே பந்தைக் கொடுங்கடா' என ஆவேசமானார்கள் நைட் ரைடர்ஸ் ரசிகர்கள். வருண் வீசிய 18வது ஓவரில், அபிஷேக் சர்மா மீண்டும் 91 மீட்டரில் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசிப் பந்தில், டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி அடித்தார் ப்ரூக். 19வது ஓவரை வீசவந்தார் ரஸல். முதல் பந்து அகலபந்தாகிப் போக, அதற்கு மாற்றாக வீசபட்ட பந்தில், அபிஷேக்கின் விக்கெட்டைக் கழட்டினார் ரஸல். அப்படியே அபிஷேக்குடன் சேர்ந்து ரஸலும் பெவிலியனுக்கு சென்றுவிட்டார். மீண்டும் தசைப்பிடிப்பு. மிச்ச பந்துகளை வீசி, ஓவரை முடித்துவிட வந்தார் தாக்கூர். `என் குருநாதர் வந்துட்டான்டா' என நைட் ரைடர்ஸ் ரசிகர்கள் குஷியானார். 3வது பந்தில் ப்ரூக் ஒரு பவுண்டரி, 5 மற்றும் 6வது பந்தில் க்ளாஸன் இரண்டு பவுண்டரிகள் என எல்லா திசையிலிருந்து ஆரஞ்சு தோள்களை எரிந்தார்கள் சன்ரைசர்ஸ் வீரர்கள். `என்ன குருநாதா இப்படி ஆகிப்போச்சு' என அரண்டு போனார்கள் கொல்கத்தா ரசிகர்கள். உமேஷ் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தில், ஒரு சிங்கிளை எடுத்து தனது சதத்தை நிறைவு செய்தார் ப்ரூக். `நீ வேற லெவல்யா' என ஆனந்தக் கண்ணீர் வடிய கைத்தட்டினார்கள் சன்ரைசர்கள். ஓவரின் 5வது பந்தில் க்ளாஸென் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு, ப்ரூக்கின் சதத்தைக் கொண்டாடினார். 20 ஓவர் முடிவில் 228/4 என இமாலய இலக்கை நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் அணி.

Rahmanullah Gurbaz
Rahmanullah GurbazSwapan Mahapatra

ரிங்கு சிங் இருக்கும் தைரியத்தில், `வானம் என்ன வானம். தொட்டுவிடலாம்...' என உத்வேக பாடல் பாடி இன்னிங்ஸைத் தொடங்கியது குர்பாஸ் - ஜெகதீசன் ஜோடி. முதல் ஓவரை வீசவந்தார் புவி. 3வது பந்திலேயே, டீப் தேர்டில் நின்றுக்கொண்டிருந்த உம்ரான் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் குர்பாஸ். முதல் ஓவரே, விக்கெட் மெய்டன். `புவனேஷ்வர்னா பொட்டு வெச்சிட்டு பொங்கல் சாப்பிடுறவன்னு நினைச்சியா, பழைய ஐ.பி.எல் ரெக்கார்ட்ஸ்லாம் எடுத்து பாரு' என காலரைத் தூக்கிவிட்டார் புவி. ப்ரூக்கிடம் `நீ ரெஸ்ட் எடுணே' என சொல்லி, வாஷிங்டன் சுந்தரை இம்பாக்ட் வீரராக இறக்கியிருந்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம். யான்சன் வீசிய 2வது ஓவரில், 3 ரன்கள் மட்டுமே. புவி வீசிய, 3வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரி அடித்தார் ஜெகதீசன். 3வது பந்தில், தன்னிடமே வந்த கேட்ச் கை நழுவிப்போனதில் அப்செட் ஆனார் புவி. `ஆத்தி... ஜஸ்ட் மிஸ்' என பெருமூச்சு வாங்கினார் ஜெகதீசன். 4வது பந்தை, பவுண்டரிக்கு அடித்தார் வெங்கடேஷ் ஐயர். யான்சன் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை, பவுண்டரிக்கு பறக்கவிட்டார் வெங்கடேஷ் ஐயர். அடுத்த பந்திலேயே, மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்த வந்து நரைனும், முதல் பந்திலேயே மீண்டும் மார்க்ரம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். 4வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை கழட்டினார் யான்சன். நடராஜன் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜெகதீசன். ஓவரின் கடைசிப்பந்தை, நேராக சிக்ஸருக்கு அடித்தார். ஜெகதீசன் அடிப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, நடராஜன் அடிவாங்குவதை நினைத்து வருத்தபடுத்தவதா என குழம்பி நின்றார்கள் தமிழர்கள். `5 ஓவர் ஆடி, 34/3 ஸ்கோர். இதுக்கு பெயர் பவர் ப்ளேயா?' என கடுப்பானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். `ஏன் டென்ஷன்' என பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் உம்ரான் மாலிக்.

உம்ரான் வீசிய முதல் பந்து, ராணாவின் பேட்டில் பட்டு டாப் எட்ஜாகி, ஷார்ட் பைனில் பவுண்டரிக்கு போய் விழுந்தது. 2வது பந்து, மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 3வது பந்து, மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு போய் விழுந்தது. 4வது பந்து, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி. 5வது பந்து, ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி. கடைசிப்பந்து, பேக்வார்டு பாயின்ட்டில் சிக்ஸுக்கு பறந்தது. ஒரே ஓவரில் 28 ரன்கள். கொல்கத்தா ரசிகர்கள் குதியாட்டம் போட்டார்கள். சன்ரைசர்ஸ் ரசிகர்கள் லேசாக பீதியாகினார். பவர் ப்ளேயின் முடிவில் 62/3 என நல்ல ஸ்கோரை எட்டியிருந்தது நைட்ரைடர்ஸ்.

Nitish Rana
Nitish Rana

மார்கண்டேவை அழைத்து வந்தார் மார்க்ரம். முதல் பந்தில் ஒரு பவுண்டரியை தட்டினார் ஜெகதீசன். 4வது பந்தில், ஜெகதீசன் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டார் த்ரிப்பாதி. 5வது பந்தை, ஷார்ட் தேர்ட் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் ஜெகதீசன். மீண்டும், தமிழர்களுக்கு ஓர் குழப்பமான நிலை. பந்து வீச வந்தார் வாஷி. ஓவரின் 4வது பந்து, பவுண்டரிக்கு பறந்தது. ஓவரில் 8 ரன்கள் மட்டுமே. 9வது ஓவரை வீசிய மார்கண்டே, 2வது பந்தில் ஜெகதீசனின் விக்கெட்டைக் கழட்டினார். ஸ்வீப்பில் தூக்கியடிக்கபட்ட பந்து, சப்ஸ்டிட்யூட் க்ளென் ஃபிலிப்ஸ் கைகளுக்கு சிக்கியது. 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் தூக்கி, அற்புதமாக ஓவரை முடித்தார் மார்க்கண்டே. யான்சன் வீசிய 10வது ஓவரில், ராணா ஒரு சிக்ஸர் அடிக்க, 10 ஓவர் முடிவில் 96/4 என முன்னேறிக்கொண்டிருந்தது கொல்கத்தா. 60 பந்துகளில் 133 ரன்கள் தேவை.

11வது ஓவரின், முதல் பந்திலேயே ரஸலின் விக்கெட்டைக் கழட்டினார் மார்கண்டே. ரஸல் அடித்த அடியில் பந்து, ஐ.பி.எல்லை ஒளிபரப்பும் செயற்க்கை கோளையே தொட்டிருக்கும். அந்த உயரத்திற்கு பறந்துச் சென்ற பந்து, கீழிறங்கி சமத்தாக யான்சனின் கைகளுக்குள் புகுந்துக்கொண்டது. ரிங்கு சிங் களமிறங்கினார். `4 ஓவர்ல மேட்ச முடிச்சு விடுணே' என கதறினார்கள் கொல்கத்தா ரசிகர்கள். மார்கண்டே, 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தி மீண்டும் ஒரு அற்புதமான ஓவரை வீசி முடித்தார்.

Andrew Russell
Andrew RussellSwapan Mahapatra

வாஷி வீசிய 12வது ஓவரின் 2வது பந்தில், 90 மீட்டருக்கு ஒரு சிக்ஸ் அடித்தார் ராணா. மார்கண்டே வீசிய 13வது ஓவரிலும், லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரை அடித்தார் கேப்டன் ராணா. 14வது ஓவரை வீசவந்தார் நடராஜன். ரிங்கு சிங் ஒரு சிக்ஸரும், ராணா ஒரு பவுண்டரியும் பார்சலில் போட்டு கொடுத்தார்கள். புவி வீசிய 15வது ஓவரில், ஒரு பவுண்டரியைத் தட்டினார் ரிங்கு. 15 ஓவர் முடிவில், 142/5 என விடாமல் துரத்திவந்தது கொல்கத்தா. 16வது ஓவரின், முதல் ஐந்து பந்துகளை அற்புதமாக வீசிய யான்சன், கடைசிப்பந்தில் மட்டும் 13 ரன்கள் கொடுத்தார். நோபாலில் ஒரு சிக்ஸர். மாற்று பந்தில் இன்னொரு சிக்ஸர் அடித்தார் ரிங்கு. அந்த ஓவரில், ராணாவின் கேட்சை நழுவவிட்டார் வாஷி. `நல்ல இம்பாக்ட் கொடுத்தீங்க தம்பி' என வாஷியைப் பார்த்தார் மார்க்ரம்.

நடராஜன் வீசிய 17வது ஓவரின், 2வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ராணா. ஆனால், அடுத்த பந்தே டீப் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இம்முறை கேட்சைப் பிடித்துவிட்டார் வாஷி. அடுத்து களமிறங்கிய தாக்கூர். கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரியை அடித்துவிட்டார். புவி வீசிய 18வது ஓவரில், தாக்கூருக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. நடராஜன் வீசிய 19வது ஓவரில், டீப் பேக்வார்டில் ஒரு பவுண்டரி, டீப் கவரில் ஒரு பவுண்டரி, டீப் மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி என டீப்பாக மூன்று பவுண்டரிகள் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ரிங்கு. அதிலும், அந்த கடைசிப்பந்து கேட்சாக வேண்டியது. தவறவிட்டார் பிளிப்ஸ். `வேணாம் பிளிப்ஸே' என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் ஆத்திரமானார்கள்.

Rinku Singh
Rinku Singh

6 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்தால் வெற்றி. முதல் பந்தை கண்ணை மூடிக்கொண்டு சுற்றினார் தாக்கூர். வாஷியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உம்ரான் மாலிக்கிற்கு முதல் விக்கெட். இந்த ஓவரை அற்புதமாக வீசிய உம்ரான், 5வது பந்தில் மட்டும் ஒரே ஒரு சிக்ஸர் கொடுத்தார். அம்புட்டுதேன். 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் அணி. ஹாரி ப்ரூக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com