’அப்போ இந்த வருடம் கோப்பை பஞ்சாப்-க்கு தானா..’ கேப்டனாக தோனி சாதனையை சமன்செய்த ஸ்ரேயாஸ்!
18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் நடைபெற்றுவருகிறது. இரண்டு சுற்று போட்டிகள் முடிவை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இரண்டு அணிகள் தோல்வியே பெறாமல் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகள் மற்றும் +1.485 நெட் ரன்ரேட் உ டன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு கோப்பை கூட வெல்லாத அணியாகவும், ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிவரை முன்னேறிய அணியாகவும் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக தொடரை தொடங்கியுள்ளது.
2024 ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் பல சர்வதேச கோப்பைகள் வென்ற ரிக்கி பாண்டிங் இருவரின் கூட்டணி பஞ்சாப் அணியை 2025 ஐபிஎல் கோப்பை வெல்லும் ஒரு அணியாக வல்லுநர்கள் கூறுமளவு மாற்றியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் பிரத்யேக சாதனையை சமன்செய்துள்ளார்.
கேப்டனாக தொடர் வெற்றிகள்..
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், தன்னுடைய சிறப்பான கேப்டன்சியின் மூலம் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தாவிற்கு கோப்பை வென்று கொடுத்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக தொடர்ந்து 2 போட்டிகளை வென்று தோல்வியே சந்திக்காமல் 8 ஐபிஎல் போட்டிகளை வரிசையாக வென்று அசத்தியுள்ளார்.
இதன்மூலம் தோல்வியே சந்திக்காமல் வரிசையாக அதிக போட்டிகளை வென்ற கேப்டன் பட்டியலில் தோனியை சமன்செய்து அசத்தியுள்ளார் ஸ்ரேயாஸ்.
ஐபிஎல் கேப்டனாக தொடர் வெற்றிகள்:
1. கவுதம் கம்பீர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -10 வெற்றிகள் -(2014-2015)
2. ஷேன் வார்னே - ராஜஸ்தான் ராயல்ஸ் - 9 வெற்றிகள் - 2008
3. எம் எஸ் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 வெற்றிகள் - 2013
4. ஸ்ரேயாஸ் ஐயர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் - 8 வெற்றிகள் - (2024-2015*)