அடி மேல் அடி! ஹைதராபாத் கோட்டையில் விழுந்த ஹாட்ரிக் இடி.. மாஸ் காட்டி ரகானேவின் கேகேஆர் அபாரம்!
தன்னுடைய முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்து,, ’அடேங்கப்பா என்னா அடி! ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது’ என ஐபிஎல் ரசிகர்களின் புருவங்களை உயர வைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசன் என அந்த அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களும் சளைக்காமல் ரன் மழை பொழிந்தார்கள். அந்தப் போட்டிக்கு பிறகு, ஹைதராபாத் அணியின் பேட்டிங் படையை எப்படித்தான் மற்ற அணிகள் எதிர்கொள்ளப் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றியது.
இனிமே ஹைதராபாத் அணிக்கு வெற்றிப்பயணம் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்து அவர்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல மொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார்கள். தோல்வி என்றால் சும்மா இல்லை, லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மிகவும் எளிதாக,, போகிற போக்கில் ஹைதராபாத்தை ஊதி தள்ளினார்கள். கொஞ்சமும் பதற்றமே இல்லாமல் வெற்றி பெற்றார்கள்.
அடுத்தடுத்த இரண்டு தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி, ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. கடந்த இரண்டு போட்டிகளின் தோல்வியே பரவாயில்லை என்ற அளவிற்கு மிகப்பெரிய இடியை இறக்கியது ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி. ஆட்டத்தில் என்ன சம்பவங்கள் எல்லாம் நடந்தது வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
இதுவரை தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே ஹைதராபாத் அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றியை பெற்ற போதிலும், லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து தோல்வியையே தழுவியது. இதனால் கொஞ்சம் மாற்றாக, கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க வெறும் 16 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கேகேஆர்.
இன்றைக்கு கொல்கத்தா அணி அவ்ளோ தான் க்ளோஸ் என்று நினைக்கையில், ஆட்டத்தை கையில் எடுத்தார்கள் கேப்டன் ரகானே மற்றும் ரகுவன்ஷி. ரகானே சிக்ஸர் மழை பொழிய, ரகுவன்ஷி பவுண்டரிகளாக பறக்கவிட்டார். அதனால், ரன்கள் ஜெட் வேகத்தில் கூடியது. ஆனால், 27 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ரகானே விக்கெட்டை பறிகொடுக்க, அரைசதம் விளாசிய வேகத்தில் ரகுவன்ஷியும் நடையைக்கட்டினார்.
செட்டில் ஆன இரண்டு பேட்ஸ்மேன்களும் வெளிவிட்டார்கள் இனி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என பேட் கம்மின்ஸ் நினைத்தபோது தான் அவருக்கு தலைவலியாக வந்தார்கள் வெங்கடேஷ் ஐயரும், ரிங்கு சிங்கும். இரண்டு பேரின் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்கியது. சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டர்கள். ரிங்கு சிங்கை எதிரே நிற்க வைத்துவிட்டு வாண வேடிக்கை காட்டினார் வெங்கடேஷ் ஐயர். 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் வெறும் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் வெங்கடேஷ்.
ரிங்கு சிங் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து களத்தில் இருக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்து அசத்தியது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷமி, அன்சாரி இருவரும் குறைவான ரன்களை கொடுத்து தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பேட் கம்மின்ஸ், சிமர்ஜீட் சிங், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ரன்களை வாரி கொடுத்தனர்.
200 ரன்கள் எல்லாம் எங்களுக்கு அசால்ட், எப்படி அடிக்கிறோம் பாரு என்று ஹைதராபாத் வீரர்கள் சொல்லி அடிப்பார்கள் என்று பார்த்தால் களத்தில் நடந்த கதையே வேறு. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தொடக்க வீரராக சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த டிராவிஸ் ஹெட், இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். அபிஷேக் சர்மா 2 ரன்னில் மீண்டும் சொதப்ப, இஷான் கிஷனும் அதே 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். 10 ரன் எட்டுவதற்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து, அதிரடிக்கு பெயர்போன ஹைதராபாத் அணியா இது! என்று பறிதாபப்படும் நிலைக்கு வந்துவிட்டார்கள். 3 விக்கெட்டுகள் போனால் என்ன நான் இருக்கிறேன் என கொஞ்ச நேரம் நம்பிக்கை கொடுத்த நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் நடையைக் கட்டி ரசிகர்களை கடுப்பேற்றினார்.
சிறப்பாக விளையாடி வந்த கமிண்டு மெண்டிசும் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அனிகெட் வர்மாவும் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹெய்ன்ரிச் கிளாசன் மட்டும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் வருவதும் போதுமாக இருந்தார்கள். 16.4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் கொல்கத்தா அணியின் வைபவ் அரோரா 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை சய்த்தார். அதேபோல், வருண் சக்கரவர்த்தி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மீண்டும் அசத்தினார். ஹர்ஷித் ரானா 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார். ரஸ்ஸல் 1.4 ஓவர்கள் மட்டுமே வீசி இரண்டு விக்கெட் எடுத்தார். வைபவ் அரோரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல், ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர்த்து தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. உண்மையில் ஹாட்ரிக் தோல்வி என்பது ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி தான். சென்றமுறை இறுதிப்போட்டி வரை சென்ற ஹைதராபாத் அணி தற்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இன்னும் போட்டிகள் இருப்பதால் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.