வைரலாகும் “என் அன்பே..” பதிவு | காதலில் விழுந்த ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக விளையாடி அணிக்கு பெருமை சேர்த்துக்கொடுத்து பல சாதனைகளை படைத்தவர் ஷிகர் தவான். 2010-ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, மிகச் சிறந்த இடதுகை பேட்டராகத் திகழ்ந்த ஷிகர் தவான், இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2,315 ரன்கள் அடித்துள்ளார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். தொடர்ந்து, அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். எனினும், ஓய்வுக்குப் பிறகு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
மறுபுறம், தவானின் கிரிக்கெட் பயணம் தடைபட்டதற்கு அவருடைய குடும்ப வாழ்க்கையும் ஒரு காரணமாக இருந்தது. ஷிகர் தவான், ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜோராவர் என்ற குழந்தை உள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்தே அவருடைய கிரிக்கெட் பயணமும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஷிகர் தவான் விவாகரத்து கோரி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். அதன் விசாரணையில் கடந்த (2023) அக்டோபர் மாதம் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இவருடைய மகன் ஜோராவர் மற்றும் ஆயிஷா முகர்ஜி ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். எனினும், தன்னுடைய மகனைக் காணாமல் தவிப்பதாக, தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், ஷிகர் தவான் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். அபுதாபியில் பணியாற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைன் என்ற பெண்ணின் காதல் வலையில் விழுந்து இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. இருவரும் ஒன்றாக வெளியே செல்லும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் ஷிகர் தவான், சோபி ஷைனுடனான காதலை உறுதிப்படுத்தி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், 'என் அன்பே' என சிவப்பு இதய ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான் துபாய்க்குச் சென்றிருந்த போது, அங்கு சோபி ஷைனை சந்தித்ததாகவும், அதன்பின் அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து, பின்னர் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பிராண்ட் தூதராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது ஷோபி ஷைன் அங்கு தவானுடன் அடிக்கடி காணப்பட்டார். முன்னதாக, பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாமல் துபாக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போதும் ஷோபி சைன், தவானுடன் இணைந்து இந்தியாவில் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.