
“நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம், அவருக்கே தன்னுடைய ஆட்டம் திருப்தியை தந்திருக்காது” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் தெரிவித்திருக்கிறார்.
குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடும் சுப்மன் கில் இதுவரை 11 போட்டிகளில் 469 ரன்களை சேர்த்துள்ளார். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் 483 ரன்களை குவித்திருந்தார். இது குறித்து கிரிக்பஸ் இணையதளத்துக்கு பேசிய விரேந்திர சேவாக், “அவர் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். இந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் அவர் 550 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இந்தியாவுக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடுபவர். இந்த சீசன் முடியும்போது அவர் 600 முதல் 700 ரன்களை எடுத்திருக்க வேண்டும். அத்தகைய திறமைப்படைத்தவர் அவர்.
நான் சுப்மன் கில்லாக இருந்திருந்தால், என் ஆட்டத்தில் நான் சந்தோஷமாக இருந்திருக்கமாட்டேன். நான் நல்ல ஃபார்மில் இருக்கும்போது இந்த ரன்கள் குறைவானதாகவே எனக்கு தோன்றும்.
அவர் திறனில் குறைவில்லை. ஆனால் நமக்கு தேவை நம்பர்கள், அதவாது அதிக ரன்கள். எனினும், இனி வரப்போகும் தொடரின் கடைசி 4 போட்டிகளில் அவர் தன்னுடைய முழு திறனையும் கொண்டு விளையாட வேண்டும். நிச்சயம் ஒரு சதமும் அவர் அடிக்க வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும்" என்றுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.