காஸாவில் கொல்லப்பட்ட ’பாலஸ்தீன பீலே’.. UEFAவைக் கடுமையாக விமர்சித்த ’எகிப்திய அரசன்’!
தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக்காகக் காத்திருந்த மக்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில், 41 வயதான சுலைமான் அல்-ஒபெய்டு கொல்லப்பட்டதாக பாலஸ்தீன கால்பந்து சங்கம் அறிக்கை (PFA) வெளியிட்டிருந்தது. இதற்காக, ஐரோப்பிய கால்பந்தின் நிர்வாக அமைப்பு (UEFA) சுலைமானுக்கு இரங்கல் பதிவிட்டிருந்தது. அதன் பதிவில், “ 'பாலஸ்தீன பீலே' சுலைமான் அல்-ஒபெய்டுக்கு பிரியா விடை. நெருக்கடியான காலங்களிலும்கூட எண்ணற்ற குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்த திறமைசாலி” எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் ரீஷேர் செய்த லிவர்பூல் கால்பந்து நட்சத்திரமான முகமது சலா, முழுமையான மற்றும் சரியான அறிக்கையை வெளியிடாததற்காக UEFAஐவை விமர்சித்தார். “அவர் எப்படி, எங்கு, எதனால் இறந்தார் என்று எங்களுக்குக் கூற முடியுமா?” எனப் பதிவிட்டார். முகமது சலாவின் இந்தப் பதிவு 1 மில்லியன் லைக்குகளை நெருங்குகிறது. மேலும் இது கிட்டத்தட்ட 3,000,000 பயனர்களால் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. PFAஇன்படி, அல்-ஒபெய்டு கொல்லப்படும்போது அவருக்கு 41 வயது. அவர் தனது அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
அதேபோல், காஸாவில் போருக்கு எதிராகக் குரல்கொடுத்த மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் முகமது சலாவும் ஒருவர். ‘எகிப்திய அரசன்’ என அழைக்கப்படும் இவர், தொடர்ந்து காஸாவில் மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உலகத் தலைவர்களையும் அவர் வலியுறுத்தி வருகிறார். முகமது சலா லிவர்பூல் அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்தாண்டின் பேலந்தோர் விருதுக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PFAஇன் கூற்றுப்படி, 2023 அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து அதன் கால்பந்து சமூகத்தைச் சேர்ந்த 325 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். CNN மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இஸ்ரேலியப் படைகளால் 1300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கால்பந்தைப் பொறுத்தவரை, பாலஸ்தீனம் 1998 முதல் FIFAவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அணி கடந்த மூன்று ஆசியப் போட்டிகளில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.