INDVENG | சதமடித்த இளம்படை.. 2002ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து சச்சின், கங்குலி பதிவு!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி, தற்போது வரை 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. இதில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (101) சதம் அடித்து அசத்தினார். அதேபோல் கேப்டன் ஷுப்மன் கில்லும் (127*) சதமடித்த நிலையில் விளையாடி வருகிறார். அவரைத் தொடர்ந்து துணை கேப்டன் ரிஷப் பண்ட்டும் அரைசதம் (65*) அடித்துள்ளார். அவரும், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம்படையின் இந்த சிறப்பான ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் பாராட்டியுள்ளனர். 2002ஆம் ஆண்டு ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக தாங்கள் விளையாடிய சிறப்பான ஆட்டத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தனர். சச்சின் 193 ரன்களும், கங்குலி 128 ரன்களும் எடுத்த அந்தப் போட்டியில், ராகுல் டிராவிட் 148 ரன்கள் எடுத்திருந்தார்.
இதுகுறித்து கங்குலி"இந்த முறை இந்திய அணியில் 4 சதம் அடிக்க வாய்ப்புள்ளது, ரிஷப் பண்ட் மற்றும் கருண் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம். 2002இல் முதல் நாள் களம் இதைவிட சற்று வித்தியாசமாக இருந்தது" எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் சச்சினும், ”இன்று, யாஷஸ்வி மற்றும் ஷுப்மன் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். எனினும், மூன்றாவது சதம் அடிக்கப்போவது யார்?” எனப் பதிவிட்டுள்ளார்.