ENG vs IND | கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்.. வரலாற்றில் தடம்பதித்தார் சுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வுசெய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் சதம்..
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். 42 ரன்கள் அடித்திருந்த போது இங்கிலாந்து கேஎல் ராகுலை வெளியேற்றி முதல் விக்கெட்டை வீழ்த்த, தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் தன்னுடைய அறிமுக போட்டியில் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
அதற்கு பிறகு கைக்கோர்த்த ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 5வது டெஸ்ட் சதமடித்து அசத்தி 101 ரன்னில் வெளியேறினார்.
ஜெய்ஸ்வாலை தொடர்ந்து ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில், 14 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி கேப்டனாக தன் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஒருபக்கம் கேப்டன் சுப்மன் கில் சதமடிக்க, மறுமுனையில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்த துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் அரைசதமடித்து அசத்தினார். இந்திய அணி முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய கேப்டனாக சாதனை..
இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய கேப்டன்களாக விஜய் ஹசாரே (1951), சுனில் கவாஸ்கர் (1976), வெங்சர்க்கார் (1987) மற்றும் விராட் கோலி (2014) முதலியோர் சாதனை படைத்த நிலையில், 5வது இந்திய கேப்டனாக பட்டியலில் இணைந்துள்ளார் சுப்மன் கில்.
இதில் சுனில் கவாஸ்கர், விராட் கோலியை தொடர்ந்து வெளிநாட்டு மண்ணில் இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிமுக போட்டியில் சதமடித்த பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.