இந்தியா - இங்கிலாந்து கோப்பை | சச்சின் தலையீட்டால் பெயர் மாற்றம் ரத்து!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. 4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை புதிய பெயரில் (ஆண்டர்சன் - தெண்டுல்கர்) வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
அதாவது, இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்றால், சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ரன் மெஷின். அவர்களை கவுரவிக்கும் விதமாக, மறைந்த மன்சூர் அலிகான் பட்டோடியின் நினைவாக வழங்கப்படும் கோப்பையின் பெயரை மாற்ற ECB திட்டமிட்டது. இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிசிசிஐ மற்றும் ECB அதிகாரிகளுடன் பேசி, பட்டோடி பாரம்பரியத்தைத் தொடர வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தினார். ஐசிசி தலைவர் ஜெய்ஷாவும் இதற்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து, இந்தியா-இங்கிலாந்து தொடரில் பட்டோடி பெயர் தக்கவைக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.