18 வருட பாரம்பரியம்.. ENG vs IND டெஸ்ட் தொடரில் வழங்கப்படும் பட்டோடி கோப்பை.. கைவிடப்படுவதாக தகவல்!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வழங்கப்படும் பட்டோடி கோப்பைக்கு, பிரியா விடையளிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு பதிலாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளை சேர்ந்த அண்மைக்கால ஜாம்பவான்களின் பெயரில், புதிய கோப்பையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டோடி கோப்பையின் தனிச்சிறப்பு..
பட்டோடி டிராபி முதன்முதலில் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவும் இங்கிலாந்தும் டெஸ்ட் தொடர் வெற்றிக்காக போட்டியிடும் பட்டமாகும். இது மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் இப்திகார் அலி கான் பட்டோடி ஆகியோரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இப்திகார் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டு அணிகளுக்காகவும் விளையாடினார், அவரது மகன் மன்சூர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தனது அபாரமான ஆட்டத்திறனால், டைகர் பட்டோடி என அழைக்கப்பட்ட மன்சூர் அலி கான் பட்டாடி, 21 வயதில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர். தான் விளையாடிய 46 டெஸ்ட் போட்டிகளில், 40 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியவர்.
முதல் பட்டோடி கோப்பையை இந்தியா வென்றது. ஆனால் அடுத்த மூன்று முறையும் இங்கிலாந்து அணியே 2011, 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளது. 2021-22 தொடர் டிராவானதால் இங்கிலாந்து அதைத் தக்க வைத்துக் கொண்டது.
தற்போது ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அதை மீண்டும் பெற இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் புதிய கோப்பை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. ஜுன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை நடக்கவிருக்கும் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடவிருக்கின்றன.