Marcus Stoinis
Marcus Stoinis PTI

RRvLSG | ஸ்டாய்னிஸ் அசத்தலில் கரை சேர்ந்த லக்னோ..!

போல்ட் வீசிய பந்துகளை கே.எல்.ராகுல் உருட்டிய உருட்டில் ஜெய்ப்பூர் சமஸ்தானமே ஆடிப்போய்விட்டது. மெய்டன் ஓவர்!

ஓபனிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஃபினிஷிங் சரியில்லையேப்பா எனும் தத்துவ முத்துடன் பத்து பொருத்தமும் பொருந்திப்போகுற அணி என்றால், அது ராஜஸ்தான் ராயல்ஸ்தான். நேற்றைய மேட்ச் மற்றொரு உதாரணம். பாயின்ட் டேபிளின் முதல் இரண்டு இடங்களில் உள்ள, ராயல்ஸ் மற்றும் சூப்பர் ஜெயன்ட் அணிகள் ஜெய்பூரில் களம் கண்டன. டாஸ் வென்ற சாம்சன், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

Marcus Stoinis
SRHvMI | ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் மும்பை இந்தியன்ஸ்

ராகுலும், மேயர்ஸும் லக்னோவின் இன்னிங்ஸை ஓபன் செய்ய `முதல் ஓவர் முதல்வர்' போல்ட், முதல் ஓவரை வீசவந்தார். போல்ட் வீசிய பந்துகளை கே.எல்.ராகுல் உருட்டிய உருட்டில் ஜெய்ப்பூர் சமஸ்தானமே ஆடிப்போய்விட்டது. மெய்டன் ஓவர்! 2வது ஓவரை வீசினார் அன்டர்ரேட்டட் சந்தீப். 2வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் மேயர்ஸ். ஓவரின் கடைசிப்பந்தில், கேப்டன் ராகுலும் ஒரு பவுண்டரி அடித்தார். மீண்டும் வந்தார் போல்ட். வெறும் 2 ரன்கள் மட்டுமே. சந்தீப் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில், ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்தார் கே.எல்.ராகுல். அதை ஜெய்ஸ்வால் மிஸ் செய்ய ராயல்ஸ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதே ஓவரில் ராகுலின் ஒரு ரன் அவுட் வாய்ப்பையும் கோட்டை விட்டார்கள் ராயல்ஸ் அணியினர். மீண்டும் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர் ராயல்ஸ் ரசிகர்கள். ராயல்ஸ் அணி இதை எல்லாம் திட்டமிட்டு செய்தது போலவே இருந்தது.

போல்ட்டின் 5வது ஓவரில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் மேயர்ஸ். 5வது பந்து, ராகுலின் பேட்டில் எட்ஜாகி பவுண்டரிக்கு போய் விழுந்தது. அடுத்த பந்திலேயே ராகுல் கொடுத்த கேட்சை ஹோல்டர் தவறவிட்டார். கே.எல்.ஆர் களத்தில் இருக்கும்வரை எதிரணிக்குதான் நல்லது என்பது நன்கு புரிந்து வைத்திருந்த ராயல்ஸ் அணி, ராகுலே அவுட் ஆக நினைத்தாலும் அவுட் ஆக்காமல் லக்னோ அணியை கொடுமைப்படுத்தியது. ஸ்மார்ட் மூவ் சாம்சன்! 6வது ஓவரை வீசிய அஸ்வின், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில், 37/0 என டெஸ்ட் மேட்ச் ஆடிக்கொண்டிருந்தது லக்னோ அணி. கே.எல்.ராகுலின் பேச்சைக் கேட்டு மேயர்ஸும் இப்போது உருட்ட ஆரம்பித்துவிட்டார். ஸ்டிரைக் ரேட் எனும் வார்த்தையே ராகுலுக்கு பொருந்தாது. வேண்டுமானால், டொக்கு ரேட் எனும் வார்த்தையை உருவாக்கி பிரத்யேகமாக பயன்படுத்தலாம்.

KL Rahul
KL Rahul

7வது ஓவரை வீசினார் சஹல். பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஹோல்டர் வீசிய 7வது ஓவரில், மேயர்ஸ் ஒரு சிக்ஸரும், ராகுல் ஒரு பவுண்டரியும் அடித்தனர். 9வது ஓவரை வீசவந்த சஹலை, சிக்ஸருடன் வரவேற்றார் மேயர்ஸ். அடுத்து கொசுறாக ஒரு பவுண்டரி. அதே ஓவரில் ஸ்லாட்டில் வீசப்பட்ட பந்தை, 103 மீட்டருக்கு ஒரு சிக்ஸர் அடித்தார் ராகுல். ஒரே ஓவரில் 18 ரன்கள். அஸ்வீன் வீசிய 10வது ஒவரில், 5 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில் 79/0 என ஒன்டே இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தது லக்னோ.

11வது ஓவரை வீசிய ஹோல்டர், ராகுலின் விக்கெட்டைக் கழட்டினார். கேட்ச் பிடித்துவிட்ட பட்லர், ரொம்பவே வருத்தப்பட்டார். லக்னோ ரசிகர்களும் ஆரவாரமாய் கொண்டாடினார்கள். அடுத்து பதோனி உள்ளே வந்தார்! போல்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே போல்டானார் பதோனி. 4-1-16-1 என சிறப்பாக தனது ஸ்பெல்லை முடித்தார் போல்ட். சஹலின் 13வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விரட்டிய மேயர்ஸ், 40 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். `சூப்பரப்பு' என கே.எல்.ராகுல் மட்டும் பெவிலியனில் கை தட்டிக்கொண்டிருந்தார். 14வது ஓவரில், ஹூடாவை `போடா' என அனுப்பிவைத்தார் அஸ்வின். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ், முதல் பந்திலேயே ரிவர்ஸ் பெடல் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார். அதே ஓவரின் 5வது பந்தில் மேயர்ஸ் காலி. இப்போதும், லக்னோ ரசிகர்களே கொண்டாடினார்கள். 15வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சஹல். 15 ஓவர் முடிவில், 109/4 என நத்தையாய் ஊர்ந்துகொண்டிருந்தது லக்னோ.

Kyle Mayers
Kyle Mayers

சஹலுக்கு பதிலாக படிக்கல்லை இம்பாக்ட் வீரராக இறக்கிவிட்டார் சாம்சன். ஸ்டாய்னிஸும், பூரனும் களத்தில். 16வது ஓவரை வீசினார் ஹோல்டர். 6 ரன்கள் மட்டுமே. 17வது ஓவரை வீசிய சந்தீப், ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அஸ்வின் வீசிய 18வது ஓவரில், வெறும் 6 ரன்கள் மட்டுமே. 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர், பவுண்டரி என அடித்து ஹோல்டரை அலறவிட்டார் பூரன். அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் சேர்த்து 17 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரை வீசினார் சந்தீப் சர்மா. 3வது பந்தில் ஸ்டாய்னிஸ் காலி! அடுத்து களமிறங்கிய க்ருணால், ஒரு பவுண்டரியை சேர்த்தார். 5வது பந்தை க்ருணால் மிஸ் செய்ய, ஸ்டிரைக்கர் என்டுக்கு மாறும் முயற்சியில் ஓடிச்சென்று அடி ரன் அவுட் ஆனார் பூரன். கடைசிப்பந்தில், மீண்டும் ஒரு ரன் அவுட்! 154/7 என குருமா கிண்டியிருந்தது லக்னோ.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் வெறியோடு ஜெய்ஸ்வாலும் பட்லரும் களமிறங்க, முதல் ஒவரை வீசவந்தார் ஆப்கானிய இளம்புயல் நவீன் உல் ஹக். முதல் பந்திலேயே எல்.டபிள்யுவிற்கு முறையிட்டார்கள். அம்பயர் கையைத் தூக்காமல் நிற்க, ராகுல் கையைத் தூக்கி ரிவ்யூ எடுத்தார். பந்து லேசாக பேட்டில் உரசியிருக்க, முதல் ரிவ்யூ காலி. ராகுலைப் பார்த்தார்கள் லக்னோ ரசிகர்கள். சிறப்பாக பந்து வீசிய நவீன், முதல் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2வது ஓவரை வீசினார் யுத்வீர். இரண்டாவது பந்து, அகலப்பந்தாகி பவுண்டரியில் போய் விழுந்தது. பாவத்த! 5வது பந்தை, ஜெய்ஸ்வாலே அடித்து பவுண்டரிக்கு பறக்கவிட்டார். சோகத்த! கடைசிப்பந்தை, கடைசியாக சிக்ஸருக்கே கடாசினார். தொயரத்த!

Jos Butler
Jos Butler

3வது ஓவரை வீசிய நவீன், 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4வது ஓவர் வீசிய ஆவேசமாக வீசிய ஆவேஷ்கான், 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். யுத்வீர் சிங்கின் 5வது ஓவரின் முதல் பந்திலேயே ஒரு பவுண்டரியை விளாசினார் ஜெய்ஸ்வால். 4வது பந்தை, பட்லர் தூக்கி கடாச 112 மீட்டர் தள்ளிப்போய் விழுந்தது பந்து! 6வது ஓவர் வீசிய ஆவேஷ், ஜெய்ஸ்வாலுக்கு இரண்டு பவுண்டரிகளும், பட்லருக்கு ஒரு பவுண்டரியும் வாரி வழங்க, பவர்ப்ளேயின் முடிவில் 47/0 என விக்கெட் இழப்பின்றி சிறப்பாகவே ஆடியிருந்தது ராயல்ஸ் அணி. `கிரிக்கெட் பார்க்குறாய்ங்களாம். போய் பொழப்ப பாருங்க' என டி.வி-யை அணைத்துவிட்டு தூங்க கிளம்பிவிட்டார்கள் பெரும்பாலான லக்னோ ரசிகர்கள்.

7வது ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 8வது ஓவரை வீசவந்தார் பிஷ்னோய். 2வது பந்து, நோ பாலில் ஒரு பவுண்டரி. 3வது பந்தில், மீண்டும் எல்.டபிள்யுவுக்கு முறையிட்டு ரிவ்யூவை இழந்தது லக்னோ. 9வது ஓவரை வீசிய லாலேட்டன் மிஸ்ரா, பட்லருக்கு ஒரு பவுண்டரியைக் கொடுத்தார். பிஷ்னோயின் 10வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில், 73/0 என பொறுமையாக இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது ராயல்ஸ் அணி.

Lucknow Super Giants players
Lucknow Super Giants players

மீண்டும் வந்தார் லாலேட்டன். முதல் பந்திலேயே பட்லர் ஒரு பவுண்டரி. ஸ்டாய்னிஸின் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிய ஜெய்ஸ்வால், ஓவரின் 3வது பந்தை, ஷார்ட் தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். இன்னும் 48 பந்துகளில் 66 ரன்கள்தான் தேவை. பொறுமையா ஆடலாம் என உள்ளே வந்தார் சஞ்சு சாம்சன். பிஷ்னோய் வீசிய 13வது ஓவரில், ரன் அவுட் ஆனார் கேப்டன் சஞ்சு. ராயல்ஸ் ரசிகர்கள் அதிர்ந்துப் போனார்கள். ஸ்டாய்னிஸின் 14வது ஓவரில், பட்லரும் காலி! டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். இதில், 15வது ஓவரை வீசவந்தார் நவீன். வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 30 பந்துகளில் 51 ரன்கள் என மேட்ச், தலைகீழாக மாறியது. ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரின் முதல் பந்திலேயே நம்பிக்கை வீரன் சிம்ரன் ஹெட்மயரும் அவுட்! இப்போது, `கிரிக்கெட் பார்க்குறாய்ங்களாம். போய் பொழப்ப பாருங்க' என டி.வி-யை அணைத்துவிட்டு தூங்க கிளம்பிவிட்டார்கள் பெரும்பாலான ராஜஸ்தான் ரசிகர்கள். 24 பந்துகளில் 48 ரன்கள் தேவை.

பிஷ்னோய் வீசிய 17வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. களத்தில், பரக்கும் படிக்கல்லும். ஸ்டாய்னிஸின் 18வது ஓவரில், 3 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை ஊட்டினார் படிக்கல். 12 பந்துகளில், 29 ரன்கள் தேவை. மீண்டும் வந்தார் நவீன். இதுவரை 3 ஓவர் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கும் நவீனை, ஏதோ எசகு பிசகாய் ஆடி 10 ரன்கள் சேர்த்தது ராயல்ஸ் அணி. இனி, 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை. தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிவிட்டு, நாக்க முக்க பாடலுக்கு நடனமாடலாம் என களத்தில் கனவு கண்டு கொண்டிருந்தார் பரக். ஆவேஷ் வீசிய, முதல் பந்தில் பவுண்டரி. ஆஹா! 2வது பந்து, பைஸில் ஒரு ரன். 3வது பந்தில், படிக்கல் அவுட்! 4வது பந்தில் ஜுரேல் அவுட்! 5வது பந்தில், அஸ்வின் ஒரு டபுள்ஸ் தட்டினார். கடைசிப் பந்தில் சிங்கிள் மட்டுமே. நான் ஸ்ட்ரைக் என்டில் நின்றுகொண்டு கனவிலேயே இருந்த பரக்கை, `கோட்டைச்சாமி எழுந்திரு' என எழுப்பிவிட்டனர் ராயல்ஸ் அணியினர். 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது லக்னோ. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பங்களித்த ஸ்டாய்னிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில், லக்னோ அணி வீரர் ஒருவரே ராகுலின் முழங்கையில் பந்தைக் கொண்டு எறிந்துவிட்டார். என்ன காரணம் என்பது கம்பீருக்கே வெளிச்சம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com