கேட்ச்களை தவறவிட்ட ஆர்சிபி.. 173 ரன்கள் அடித்த ராஜஸ்தான்! வெற்றி யாருக்கு?
ஐந்து போட்டிகளில் முடிவில் 3 வெற்றிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணியும், 2 வெற்றிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 173 ரன்களை அடித்துள்ளது.
ஜெய்ஸ்வால் அரைசதத்தால் 173 ரன்கள் அடித்த ராஜஸ்தான்!
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரும் களம்கண்டனர். முதல் 6 பவர்பிளே ஓவரில் விக்கெட்டை இழக்காமல் விளையாடினாலும் 45 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் மோசமாகவே பேட்டிங் செய்தார்.
19 பந்தில் 15 ரன்கள் என படுமோசமாக விளையாடிய சஞ்சு சாம்சன், க்ருணால் பாண்டியா பந்தில் அடிக்க சென்று ஸ்டம்ப் அவுட் மூலம் வெளியேறினார். தொடர்ந்து ஆர்சிபி பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், கைக்கு வந்த ரியான் பராக்கின் கேட்ச்சை கோட்டைவிட்டார் யஷ் தயாள்.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரியான் பராக் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 75 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசியாக வந்து 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட துருவ் ஜுரேல் 35 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 173 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி.
160-க்குள் கட்டுப்படுத்தவேண்டிய டோட்டலை 173 வரை செல்ல அனுமதித்த ஆர்சிபி அணி, 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்யவுள்ளது.