Dhoni | கடினமான முடிவு தான்... ஆனால் இது என் ரசிகர்களுக்கான பரிசு... ஓய்வு குறித்து தோனி..!

இன்னொரு 9 மாதங்கள் கடினமான பயிற்சிகள் மேற்கொண்டு இன்னுமொரு சீசன் விளையாடி விட வேண்டும் . ஆனால், இந்த முடிவுக்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும்.
dhoni
dhoniKunal Patil

ஒவ்வொரு சென்னை ரசிகனும், ஒவ்வொரு தோனி ரசிகனும் , ஏன் ஒவ்வொரு டி20 ரசிகனும் எதிர்பார்த்த தருணம் நேற்று மீண்டும் நடந்தேறியது. தோனியை வெறுப்பவர்களால்கூட அவரின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை வெறுக்க முடியாது. 41 வயதில் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம். "எம்.ஜி.ஆர், ரஜினிக்கு நிகரான ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார் தோனி. அந்த ரசிகர்கள் அவரை 75 வயது வரையிலும் கூட ஓய்வு பெற விடமாட்டார்கள் " என சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார் ஹர்ஷா போக்ளே. ஆம், அதுதான் உண்மையும் கூட. நேற்று ஆட்டம் முடிந்ததும், தோனியின் பேச்சு துவங்கியது. எல்லோர் கண்களும் குளமாகி நிற்க, தோனி ஓய்வு பற்றிப் பேசத் துவங்கினார்.

dhoni
CSKvGT | சாம்பியன்ஸ்... தோனி ஸ்டம்பிங் முதல் ஜடேஜாவின் வின்னிங் ஷாட் வரை... எல்லாமே சென்னை தான்..!
Q

ஹர்ஷா போக்ளே : மீண்டும் சந்திக்கிறோம். இதுமாதிரியான பெரு வெற்றிகளுக்குப் பின்னால் நாம் சந்திப்பது இயல்பானது. நான் ஏதாவது கேட்க வேண்டுமா , இல்ல நீங்களே ஏதாவது சொல்லப்போகிறார்களா.?

A

தோனி : உங்களின் கேள்விகளின் மூலமாகவே பதிலைச் சொன்னால் சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன்.

Q

ஹர்ஷா போக்ளே : கடந்தமுறை நீங்கள் கோப்பை வென்ற போது, நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விட்டுச் செல்லவிருக்கும் legacy குறித்து கேட்டிருந்தேன். அப்போது, நான் இன்னும் விட்டுச் செல்லவில்லையே என பதில் சொல்லியிருந்தீர்கள்

A

தோனி : ஆக, பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள். சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இதுதான் நான் ஓய்வை அறிவிக்க சிறந்த தருணமாக இருக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு எனக்குக் கிடைத்திருக்கும் அன்பையும் வரவேற்பையும் பார்க்கும் போது, மிக எளிதாக நன்றி என சொல்லிவிட்டு விடைபெற்றுவிட முடியும். அதே சமயம், இன்னொரு 9 மாதங்கள் கடினமான பயிற்சிகள் மேற்கொண்டு இன்னுமொரு சீசன் விளையாடி விட வேண்டும் என்று தோன்றுகிறது . ஆனால், இந்த முடிவுக்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும். நான் முடிவெடுக்க இன்னும் ஏழு மாதங்கள் இருக்கிறது. நான் இந்த மக்களுக்கு தரப்போகும் பரிசாகவே அந்த முடிவு இருக்கும். இத்தனை ஆண்டுகளாக, இந்த மக்கள் என் மீது அவ்வளவு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள். அது அவ்வளவு எளிதானதில்லை. இந்த ரசிகர்களின் அன்புக்கு நான் ஏதாவது திரும்பிச் செய்ய வேண்டும்.

Q

ஹர்ஷா போக்ளே : பொதுவாக உங்கள் முகத்தில் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் எந்த வித உணர்வுகளையும் பார்க்க முடியாது. ஆனால், இதற்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது , ரசிகர்களைப் பார்த்து கொஞ்சம் எமோஷனல் ஆனீர்கள் .

dhoni
dhoniKunal Patil
A

தோனி : இந்தமுறை எமோசனலாக நிறைய காரணம் இருந்தது. இது என் கரியரின் கடைசிக் காலம். இந்த சீசன் இங்கிருந்துதான் தொடங்கியது. நான் விளையாட உள்ளே நுழைந்ததும், ஒட்டுமொத்த அரங்கமும் என் பெயரை ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. என் கண்கள் குளமாகியிருந்தன. டக் அவுட்டில் சில நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். நான் அதை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். அதை அழுத்தமாக மாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதே மாதிரித்தான், சென்னையில் என் கடைசிப் போட்டியாக அது இருந்திருக்கலாம். ஆனால், மீண்டும் வந்து என்னால் எவ்வளவு விளையாட முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நான் இப்போது எதுவாக இருக்கிறேனோ, அதற்காகத்தான் அவர்கள் என்னை ஆராதிக்கிறார்கள்.

நான் ஆடும் கிரிக்கெட் மிகவும் எளிமையானது. அதில் பெரிய அளவுக்கான ஆர்த்தோடாக்ஸ் டெக்னிக்கல் ஷாட்கள் எல்லாம் இருக்காது. அதை எல்லோராலும் ஆட முடியும். ஸ்டேடியத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் என்னைப் போல ஆட முடியும் என நம்புகிறார்கள். அதனால் என்னை
எளிதில் தொடர்புப்படுத்தி கொள்கிறார்கள் என நினைக்கிறேன். நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு சுத்தமாய் சம்பந்தமில்லாத ஒரு குணத்திற்கு என்னை மாற்றிக்கொள்ள ஒருநாளும் நான் யோசித்ததில்லை. ஒவ்வொரு கோப்பையும் ஸ்பெஷல் ஆனதுதான். ஆனால், ஐபிஎல்லின் சிறப்பென்பது ஒவ்வொரு முக்கியமான போட்டிக்கும் நீங்கள் தயாராகும் விதம் தான். அதை நாங்கள் சிறப்பாகவே செய்தோம் என நம்புகிறேன். இன்று சில சொதப்பல்கள் இருந்தது. பவுலிங் டிப்பார்ட்மெண்ட் சோபிக்கவில்லை. ஆனால், பேட்டிங் டிப்பார்ட்மெண்ட் அதற்கு ஈடுகொடுத்து ஆடியது. நானும் சமயங்களில் விரக்தி அடைவதுண்டு. அது மனித இயல்பு. ஒவ்வொருவரும் அழுத்தத்தை ஒவ்விரு விதமாக வெளிக்காட்டுவார்கள். நான் அவர்களின் இடத்திலிருந்து ஒவ்வொரு பிரச்னையையும் பார்க்கிறேன்.

dhoni
dhoniKunal Patil

ரஹானே போன்ற வீரர்கள் எல்லாம் அனுபவமிக்கவர்கள், அதனால் அவர்கள் பற்றி பெரிதாக நான் யோசிப்பதில்லை. யாருக்காவது குழப்பமிருந்தால், என்னிடம் நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள். கிரவுண்டில் இருக்கும் போது நூறு சதவிகித ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது அம்பதி ராயுடுவின் ஸ்பெஷல். ஆனால், அவர் இருக்கும்வரை நான் ஃபேர்பிளே விருதை வெல்ல முடியாது . 'இந்தியா ஏ' போட்டிகளில் இருந்து நீண்ட காலமாக அவருடன் விளையாடி வருகிறேன். ஸ்பின், பேஸ் இரண்டையும் சமாளித்து ஆடக்கூடியவர் ரஹானே. அவரும் என்னைப் போலத்தான் மொபைலை பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார். அவர் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை (ராயுடு இந்த சீசனும் ஓய்வு பெறுகிறார்) இன்னும் ரசிப்பார் என நம்புகிறேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com