வருடங்கள் ஆனாலும் குறையாத வேகம்.. கில்லை கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்த தோனி!

ஐபிஎல் நடப்பு சீசனில் குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சுப்மன் கில்லை, கண் இமைக்கும் நேரத்தில் தோனி, ஸ்டெம்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
dhoni stumping
dhoni stumpingtwitter page

நடப்பு ஐபிஎல் சீசனில் கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என 4 முறை கோப்பைகளை வென்ற சென்னை அணியும் 2வது முறையாகக் கைப்பற்றுவதற்கு குஜராத் அணியும் மல்லுக்கட்டி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நேற்று (மே 28) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அம்மைதானத்தில் மழை கடுமையாக விளையாடியதால் போட்டி, ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, அவ்விரு அணிகளுக்கான இறுதிப் போட்டி, இன்று அதே மைதானத்தில் தொடங்கியது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடக்க பேட்டர்களான விருத்திமான் சகாவும், சுப்மன் கில்லும் பொறுமையுடன் விளையாடினர். இதனால் அவ்வணியின் ரன் ரேட் மிகவும் குறைந்திருந்தது. இதற்கிடையே துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட கில், அதைத் திருப்பிவிட தீபக் சாஹரின் கைக்குச் சென்றது. அந்த எளிய கேட்சை தீபக் சாஹர் கைவிட்டதால், சுப்மன் கில்லின் அதிரடி தொடங்கியது. அதுபோல், சஹா அடித்த கேட்சையும் சாஹர் தவறவிட்டார். மேலும் ஜடேஜாவின் ரன் அவுட்டும் மிஸ்ஸானது.

இப்படி, ஆரம்பம் முதலே சென்னை அணியின் ஃபீல்டிங் சொதப்பலால், கில்லும், சஹாவும் வாணவேடிக்கை காட்டினர். இதனால் முதல் பவர் பிளேவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை எடுத்திருந்தது. இப்படியே போனால் தமக்குப் பாதமாகிவிடும் என்று நினைத்த தோனி, ரவீந்திர ஜடேஜாவை பந்துவீச அழைத்தார். அவர், 7வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை இறங்கி அடிக்க முயன்ற சுப்மன் கில்லை, கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் அவுட்டாக்கினார். தோனி, செய்த இந்த ஸ்டெம்பிங் வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கில், நடையைக் கட்டினார். தோனியின் இந்த மின்னல் வேக ஸ்டம்பிங்கை பலரும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. அவ்வணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உதவியுடன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, 0.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்துவருவதால் ஆட்டம் தடைப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com