
2024 டி20 உலகக் கோப்பையில் புது முகங்கள் இந்திய அணியில் இருப்பார்கள் என்று இந்திய அணியில் முன்னாள் வீரரும் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ESPN Cricinfo இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். "2024 டி20 உலகக் கோப்பை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மிக திறமையான கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். 2024 உலகக் கோப்பை அணியில் புதுமுகங்கள் இருப்பார்கள். நிச்சயமாக அந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருப்பார். ஏற்கெனவே இந்திய அணியை சில போட்டிகளில் வழிநடத்தி வருகிறார். அவர் நல்ல உடற் தகுதியுடன் இருந்தால், நிச்சயம் அவர்தான் கேப்டன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியை தேர்வு செய்தது போல், 2024-க்கான அணியை பிசிசிஐ தேர்வு செய்யும் என நினைக்கிறேன். ஹர்திக் பாண்ட்யாவுக்கு போதுமான அனுபவம் இருப்பதால் ஒரு சிறந்த அணியை அவரால் தேர்வு செய்ய முடியும். நீங்கள் ரஞ்சி கோப்பையோ அல்லது ஐபிஎல் எந்த அணிக்கு கேப்டனாக இருந்தாலும் உங்களுக்கான தலைமைப் பன்பு தானாகவே அமைந்துவிடும்" என்றார் ரவி சாஸ்திரி.
தொடர்ந்து பேசிய அவர் "இப்போதைக்கு டி20 உலகக் கோப்பை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால் முதலில் ஒருநாள் உலகக் கோப்பை முடிய வேண்டும். அதன் பின் தயாராகலாம். அதற்கான நேரம் இருக்கிறது. உலகக் கோப்பை அக்டோபரில்தான் நடத்திறது. இந்த ஐபிஎல் முடிந்ததும் நிறையப் போட்டிகள் ஒன்றுமில்லை. அக்டோபர் உலகக் கோப்பைக்கு முன்பு 4 அல்லது 5 போட்டிகள்தான் இருக்கிறது" என்றார் ரவி சாஸ்திரி.