பாக். வீரருக்கு அழைப்பு.. கிளம்பிய எதிர்ப்பு.. விளக்கமளித்த நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக்கல் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், ஈட்டு எறிதலில் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா. இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டு எறிதல் போட்டி’ பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டெடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
அந்த வகையில், இந்த தொடரில் பங்கேற்க 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். எனினும், நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்துள்ளார். ‘வரும் மே 22ஆம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது’ என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில், அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியிருந்தது. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நீரஜுக்கு எதிராகக் கண்டனங்களையும் பதிவு செய்தனர். மேலும், நீரஜ் சோப்ராவின் தேசபக்தி குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இந்தச் சூழலில் நீரஜ் சோப்ரா விளக்கமளித்துள்ளார். அவர், “அர்ஷத் நதீமை அழைத்தது குறித்து நிறைய பேச்சுகள் வந்தன. அதில் பெரும்பாலானவை வெறுப்பு மற்றும் துஷ்பிரயேகம் சம்பந்தப்பட்டவை. அவர்கள், என் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. நான், வழக்கமாக சொற்ப வார்த்தைகளை மட்டுமே பேசுபவன். ஆனால் அதற்காக நான் தவறு என்று நினைப்பதை எதிர்த்துப் பேச மாட்டேன் என்று அர்த்தமல்ல. நமது நாட்டின் மீதான எனது அன்பையும், எனது குடும்பத்தின் மரியாதை மற்றும் கௌரவத்தையும் கேள்விக்குள்ளாக்குவது இன்னும் அதிகம்.
பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு தாக்குதல் நடக்கும் முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காஷ்மீர் தாக்குதல் ஓர் எதிர்பாராத சம்பவம். இது ஒரு விளையாட்டு வீரராக சக வீரருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு. இத்தனை ஆண்டுகளாக எனது நாட்டின் கொடியை பெருமையுடன் சுமந்து விளையாடியுள்ளேன். இன்று எனது தேசப்பற்றையே கேள்வி எழுப்புவது மிகவும் வலிக்கிறது. காரணமின்றி, என்னைப் பற்றி விளக்க வேண்டியிருப்பது வேதனை தருகிறது. நாங்கள் சாதாரண மனிதர்கள். எங்களை தயவுசெய்து வேறுமாதிரி சித்தரிக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.