அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ரூ.18 கோடிக்கு சென்ற யுஸ்வேந்திர சாஹல்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், பல ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் நடைபெற்று வருகிறது.
ரூ.18 கோடிக்கு சென்ற சாஹல்..
2025 ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ரூ.18 கோடிக்கு ஏலம் சென்றுள்ளார்.
சாஹலுக்கு சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ, டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப், சன்ரைசர்ஸ் முதலிய அணிகள் போட்டி போட்டன. இறுதியாக 17.75 கோடி வரை சன்ரைசர்ஸ் அணி பிட் செய்த நிலையில், இறுதி பிட்டாக ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டிச்சென்றது.
ஷமி, மில்லர், சிராஜ்
முகமது ஷமி அடிப்படை விலை 2 கோடிக்கு வந்த நிலையில், அவரை ரூ. 10 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி தட்டிச்சென்றது.
டேவிட் மில்லரை ஆர்சிபி அணி கடைசி வரை சென்ற நிலையில், இறுதி பிட்டாக லக்னோ அணி 7.50 கோடிக்கு தட்டிச்சென்றது.
ஆர்சிபியிலிருந்து வெளியேற்றப்பட்ட முகமது சிராஜை வாங்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் போட்டியிட்டன. முடிவில் 12.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் தட்டிச்சென்றது.
2025 ஐபிஎல் ஏலத்தின் அதிகபட்ச ஏலமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.