”ஐபிஎல்லிருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி யோசிக்க வேண்டும்” - முன்னாள் வீரர் சொன்ன கருத்து!
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இது, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி, முதல்கட்டமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. ஏற்கெனவே அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, தோனியே மீண்டும் கேப்டனாக்கப்பட்டார். என்றாலும், அவர் தலைமையிலான நடப்பு சென்னை அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது. மேலும், அணியையும் தோனியையும் விமர்சித்து வருகின்றனர்.
ஐந்து முறை சாம்பியனும், 12 பிளேஆஃப் போட்டிகளில் பங்கேற்ற பெருமையும் கொண்ட சென்னை அணி, 18வது சீசனில் மோசமான ஆட்டத்தைத் தந்ததைத் தொடர்ந்து தோனியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் பரவி வருகின்றன. அந்த வகையில், ”ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எம்எஸ் தோனி பரிசீலிக்க வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “மஹியின் (தோனி) உடற்தகுதி நிலையைக் கருத்தில் கொண்டு அவர் விளையாட வேண்டும். அவர் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு குறித்து, கடந்த சில வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சென்னை அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ள அவரது குடும்பத்தினர் சேப்பாக்கத்திற்கு வந்தபோது தோனி ஓய்வு பெறுவதாக வதந்திகள் பரவின. 43 வயதான அவர் பேட்டிங் வரிசையில் இறங்கியது வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தோனி, “இந்த ஐபிஎல் முடிந்த பிறகு, என் உடல் தகுதி தாங்குமா என்பதைப் பார்க்க இன்னும் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது முடிவு செய்ய எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இதன்மூலம், அவர் அடுத்த ஆண்டும் விளையாட இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.